

சென்னை,
பெண்கள் தங்களது உடல்நலம், ஹார்மோன் மாற்றங்கள், கருவுறுதல் மற்றும் மனநலம் குறித்து தயக்கமின்றிப் பேசத் தொடங்கியுள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்பமாக இருக்கும் சமந்தா குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா, விளையாட்டு வீராங்கனை வித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு தொடர்பாக சமந்தா பேசினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “முந்தைய தலைமுறையினர் மாதவிடாய் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை வெளியில் சொல்லாமல் சகித்துக்கொண்டனர். ஆனால், தற்போதைய பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம், ஹார்மோன் மாற்றங்கள், கருவுறுதல், மனநலம், தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். மேலும், இத்தகைய பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வுகளைத் தேடுவதுடன், அவற்றைப் பற்றித் தயக்கமின்றிப் பேசவும் தொடங்கியுள்ளனர்” என்றார்.
பெண்கள் தங்களது உடல்நலப் பிரச்சினைகளை மறைக்காமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவதில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் என்பதை சமந்தாவின் கருத்துகள் எடுத்துரைக்கின்றன.