

சென்னை,
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது யதார்த்தமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகை பார்வதி திருவோத்து. எப்போதும் சமூகப் பிரச்சினைகளுக்காகவும், சினிமா துறையில் பெண்களுக்காகவும் குரல் கொடுத்து வரும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பெண்களை மையப்படுத்திய கதைகள்' (Women-oriented films) என்ற வகைப்பாடு குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களில் கதைகளை பாலின ரீதியாகப் பிரிப்பது தேவையற்றது என்று குறிப்பிட்ட பார்வதி, “நாம் உருவாக்கும் படங்களை பெண்களை மையப்படுத்திய படங்கள் எனத் தனியாகப் பிரிக்கக் கூடாது. அனைத்துக் கதைகளும் மனிதர்களை மையப்படுத்திய கதைகளாகவே (Human-oriented stories) சொல்லப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“பெண்களின் கதைகளை மனிதர்களின் கதைகளாகப் பார்க்காமல், 'அது பெண்களின் கதை' எனத் தனிமைப்படுத்துவதுதான் இங்குள்ள மிகப்பெரிய பிரச்சினை,” என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
ஆண்களின் வாழ்வியலைப் பேசும் கதைகளை பெண்கள் எளிதாகப் புரிந்து கொண்டு ரசிப்பது போலவே, பெண்களின் உணர்வுகளைப் பேசும் கதைகளையும் ஆண்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், சமூகத்தில் நிலவும் பாலின பேதம் தான் நம்மை அப்படிச் சிந்திக்க விடாமல் பிரிக்கிறது என அவர் சாடியுள்ளார்.
தற்போது ஹிருத்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்டார்ம்' (Storm) என்ற தொடரில் நடித்துள்ள பார்வதி, தனது ஒவ்வொரு நேர்காணலிலும் இத்தகைய ஆழமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். சினிமாவைக் கலை வடிவாக மட்டும் பார்க்க வேண்டும் என்ற அவரது இந்தக் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.