

சென்னை,
கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது ரஜினிகாந்தின் சுயசரிதை குறித்துப் பேசியதாகவும், அது விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்ததாகவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்தைச் சந்தித்தது குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
"ரஜினிகாந்த் அவர்களை
எப்போது சந்தித்தாலும்
இன்னிசை பாடும் இதயம்
எதிராளிக்கு
இன்பம் கடத்தும்
மின்சார மனிதர் அவர்
“பார்த்து நாளாயிற்று;
பார்க்க வந்தேன்;
ஜெயிலர் 2 வெற்றிபெற
வாழ்த்துகிறேன்” என்றேன்
கலை பேசினோம்;
வாழ்வியல் பேசினோம்;
ஒரு வார்த்தைகூட
அரசியல் பேசவில்லை
“எப்போது வெளிவரும்
சுயசரிதை” என்றேன்
“வேலை நடக்கிறது;
விரைவில் வெளிவரும்" என்றார்
“உங்கள் சுயசரிதை எதிர்பார்க்கப்படுகிறது" என்றேன்
"ஏன்?" என்றார்
"பலபேருக்கு
வரலாறு இருக்கிறது;
உங்களுக்கு வசீகரமும்
இருக்கிறது” என்றேன்
நான் சொன்னதை
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்த்துக்கொண்டார்
"முதலில்
தமிழ் ஆங்கிலம்
இரண்டிலும் வெளிவரலாம்" என்றார்
"வந்தால்
அதிகம் விற்பனையாகும்
புத்தகங்களுள் ஒன்றாய்
விளங்கும்" என்றேன்
பசுந்தேநீர்
பருகக் கொடுத்தார்
அதிலிருந்த துளசிமணம்
வீடு வரும்வரை
வீசியது நாசியில்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.