இளையராஜா, சரத்குமாரை நேரில் சந்தித்த எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள்

இன்று காலை இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரை எழுத்தாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்துள்ளனர்.

இளையராஜா, சரத்குமாரை நேரில் சந்தித்த எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள்
Published on

சென்னை,

இளையராஜா, சரத்குமாரை நேரில் சந்தித்த தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் அவர்களை எழுத்தாளர் சங்கத்தில் இணையவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

எழுத்தாளர்கள் சங்கம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இயக்குநர் சேரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் இயக்குநர் பாக்யராஜ் நிரந்தர கௌரவத் தலைவராக கவுரவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (South Indian Film Writers' Association) தலைவர் சேரன் மற்றும் புதிய நிர்வாகக் குழுவினர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைச் சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் கூட கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த் பெற்றனர்.

இளையராஜா, சரத்குமாருடன் சந்திப்பு

அதனை தொடர்ந்து இன்று இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரை எழுத்தாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"காலையில் ஒருவரை பார்த்தேன்.. அவரின் முதல் வார்த்தை என்னடா ஏன் படமே பண்ணாம இருக்க.. எனக்கேட்ட அந்த மாத்திரம் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அந்த அக்கறை.. அவரை பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது.. ஆனாலும் இவன் நல்லா இருக்கனுமே என நினைத்த அந்த பார்வை என்னை ஏதோ ஒரு உற்சாகம் தந்தது..

அவர் இசைஞானி... அவரது இசையால் குரலால் ஈர்க்கப்பட்டு சினிமாவின் ஒரு அதிகாரம் படிக்க முயன்ற எனக்கு ஒரு படத்தில் அழகான பாடல்களை கொடுத்து நீ நல்லா வருவ என சொன்ன அவர் வாய் முகூர்த்தம் 23 படங்கள் கதைநாயகனாக... வணங்குகிறேன் இளையராஜா அவர்களை.."

"அடுத்து ஒருவரை சந்தித்தேன்.. வாசல்வரை வந்து வரவேற்று எங்களுக்கு பொன்னாடை போர்த்தி மனம்விட்டு பேசி எங்களது தேவைகளை கேட்டு உடனுக்குடன் அதற்கான தீர்வை தேடி வழிநடத்தி உறுப்பினர் படிவத்தை உடனே முழுக்க பூர்த்தி செய்தி கையெழுத்திட்டு... இந்த நிகழ்வு ஒரு அற்புதமான நண்பருக்கு அடையாளமாய் இருந்தது.. என்னைத்தேடி என் சேரன் வந்திருக்கும்போது அவரை மனம் குளிர அனுப்புவது அவருக்கு நன்மை பயக்கும் என உணர்ந்த நண்பர்... 30 வருடங்களாக அதே அன்பு... அவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சார் அவர்கள் இன்றைய நாளில் நான் சந்தித்த இரு பெரும் ஆளுமைகளும் என்னை உத்வேகப்படுத்தினர்.. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் எங்கள் எழுத்தாளர் சங்கத்தில் இணையவேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்றது பெரும் மகிழ்ச்சி.."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com