

இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘யானைமரம்’. அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர். சசிகலா இப்படத்தைத் தயாரித்துள்ளார். அரவிந்த் சித்தார்தா இசையமைக்க, தமிழ் மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. அந்தக் கிராமத்தில் வசிக்கும் சிறுவன், தனக்குக் கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காகப் போராடுகிறான். அதேபோல், சிறுவயதில் தான் நட்டு வளர்த்த மாமரத்தின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருக்கிறான்.
யானையைப் போன்று உயர்ந்து வளர்ந்து நிற்கும் அந்த மாமரத்துக்கும் சிறுவனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், ‘யானைமரம்’ திரைப்படம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை இப்படம் 20 விருதுகளைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்து வரும் இப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிறுவனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவைப் பேசும் இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.