"ராமாயணம்" படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘ராமாயணம்’
மும்பை,
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ராமாயணம். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.
நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.
இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. முதலில் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது யாஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் கய் நோரிஸ் படக்குழுவுடம் இணைந்துள்ளார். இவர் 'மேட் மேக்ஸ்' உள்ளிட்ட பல ஆக்ஷன் படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.






