

பெங்களூரு,
'கே.ஜி.எப்' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் யாஷ், தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா, ருக்மினி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், யாஷ் ரசிகர் மன்றத்தின் சிவமொக்கா மாவட்ட தலைவரான சுனில் குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த நடிகர் யாஷ், செல்போன் வீடியோ அழைப்பு மூலம் சுனில் குமாரை தொடர்புகொண்டு அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
மேலும், விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த அவர், அதற்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறினார். இதையடுத்து சுனில் குமாரின் குடும்பத்தினரிடமும் பேசிய யாஷ், அவர்களுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை அளித்தார்.
திரை நட்சத்திரமாக மட்டுமல்லாமல், தனது ரசிகர்களின் நலனிலும் அக்கறை காட்டிய யாஷின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.