10 ஆண்டுகளை நிறைவு செய்த 'என்னை அறிந்தால்' படம்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'என்னை அறிந்தால்' படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி, திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் அருண் விஜய், அனிகா, பார்வதி நாயர், விவேக், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படம் இவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ.100 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #10YearsOfYennaiArindhaal என்ற ஹாஷ்டேக்-ஐ பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.






