

சென்னை,
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடந்த 13ந் தேதி ‘கெணத்த காணோம்’ படம் வெளியானது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஆர்.பி டாக்கீஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான இறுதிகட்டப் பணிகளின் போது உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் இறுதிகட்டப் பணிகளை முடித்து, படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் கிராமத்தில் கோவில் பூசாரியாக நடித்துள்ளார் யோகி பாபு. தண்ணீருக்காக தோண்டப்படும் குழியால் ஏற்படும் பிரச்சினை காரணமாக ஊரே காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்பின் நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கெணத்த காணோம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் ரசிகர்களுக்கு யோகிபாபு நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றியை பார்க்க இயக்குனர் சுரேஷ் சங்கையா உயிருடன் இல்லாதது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும், ஆனால் அவரது நோக்கம் இந்தப் படத்தின் மூலம் என்றும் உயிருடன் இருக்கும் என்றும் யோகி பாபு உணர்வுபூர்வமாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.