யோகி பாபுவின் 300-வது திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்

யோகி பாபுவின் 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ ஜூன் மாதம் வெளியாகுமென படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
யோகி பாபுவின் 300-வது திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. காமெடி நிகழ்ச்சியான ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமான பாபு, 2009ல் அமீர் நடித்த ‘யோகி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் ‘யோகி பாபு’ ஆனார். ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துவருகிறார். கலகலப்பு (2012), மான் கராத்தே (2014) போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ஜெயிலர், கடைசி விவசாயி, மெர்சல், மாஸ்டர் மற்றும் மாவீரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். யோகி பாபு நடித்த ‘சட்டென்று மாறுது வானிலை’ படம் சமீபத்தில் வெளியானது. ரஜினியுடன் யோகி பாபு நடித்த ‘ஜெயிலர் 2’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

நகைச்சுவை நடிகராக பயணத்தைத் தொடங்கிய யோகி பாபு சிறிது காலங்களிலேயே பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது நடிகர் யோகி பாபு தனது 300ஆவது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ளார். தேவ் சினிமாஸ் சார்பாக இந்தப் படத்தை கிருத்திகா தங்கப்பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் டி.இமான் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்ராயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. காமெடி ரோலை தவிர்த்து ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். கடினப்பட்டு ஒரு வண்டியை வாங்கும் யோகிபாபுவிடம் இருந்து திருடிச்செல்லும் கும்பல், ஒரே வண்டியை பலபேரிடம் விற்று சுத்தலில் விடுகிறது. முடிவில் யோகிபாபு தன்னுடைய வண்டியை மீட்டாரா என்பதே திரைக்கதையாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் ஜூன் மாதம் வெளியாகுமென படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

அல்லு அர்ஜுன்-அட்லீயின்‘ராக்கா’, ரவி மோகனின் முதல் இயக்கமான ‘ஆன் ஆர்டினரி மேன்’ உள்ளிட்ட பல படங்கள் யோகி பாபு கைவசம் உள்ளன. மேலும் கிஷோர் குமார் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார். இப்படத்தில் முதல் முறையாக யோகி பாபு பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com