'தூக்குதுரை' விமர்சனம் - மெதுவான திரைக்கதை மக்களை கவர்ந்ததா..?

காதல் கதையாக ஆரம்பித்து விறுவிறுப்பான பேய் கதையாக முடித்திருக்கிறார் இயக்குனர்.
'தூக்குதுரை' விமர்சனம் - மெதுவான திரைக்கதை மக்களை கவர்ந்ததா..?
Published on

கிராமத்தில் ஜமீன்தார் மாரிமுத்துவுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கிறது. இதை பொறுக்க முடியாமல் அவரது உறவினர் நமோ நாராயணன் பகை வளர்க்கிறார். மாரிமுத்துவின் மகள் இனியாவுக்கு கோவில் விழாக்களில் சினிமா படம் போட்டு காட்டும் யோகிபாபு மீது காதல் மலர்கிறது. இருவரும் ஊரை விட்டு ஓடுகின்றனர்.

அப்போது மாரிமுத்துவின் ஆட்கள் தடுத்து நிறுத்தி யோகிபாபுவை கிணற்றில் தூக்கி போட்டு தீ வைத்து எரித்து கொன்று விடுகின்றனர். இந்த களேபரத்தில் கோவிலுக்கு சொந்தமான விலைமதிப்பில்லா தங்க கிரீடம் மாயமாகிறது.யோகிபாபு பேயாக வந்து ஊர்மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அதில் இருந்து மக்கள் மீண்டார்களா? தங்க கிரீடம் கிடைத்ததா? என்பது மீதி கதை.

யோகி பாபு முதலில் கொஞ்சம் கடைசியில் கொஞ்சம் என சில இடங்களில் வருகிறார். ஆனாலும் அவர் வரும் இடங்களில் கவனம் பெறுமளவுக்கு அடர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார். இறுதி காட்சியில் சமூக ஏற்றத்தாழ்வுகளை பேசும் காட்சிகள் மனதை தொடுகிறது.

இனியா ராஜா வீட்டு மகள் என்பதற்கு ஏற்ப கம்பீரமாக வருகிறார். நடிப்பிலும் குறை ஏதும் இல்லை. நண்பர்களாக வரும் மகேஷ், பால சரவணன் சென்ராயன் ஆகியோருக்கு மொத்த படத்தையும் சுமக்கும் கனமான வேடம். அவர்களும் சலிப்பு ஏற்படாத அளவுக்கு நகைச்சுவையில் தங்கள் முழு பங்களிப்பை செய்திருக்கிறார்கள். மூவரும் கிரீடத்தை திருட அலையும் காட்சிகள் கலகலப்பு.

மொட்டை ராஜேந்திரன் ஓரிரு காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். அஸ்வின், சத்யா, வினோத் தங்கராஜு ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. மாரிமுத்து, நமோ நாராயணன் அனுபவசாலிகள் என்பதால் அவர்களிடம் தேர்ந்த நடிப்பை பார்க்க முடிகிறது.

ரவி வர்மா ஒளிப்பதிவில் ராஜாவின் அரண்மனை வீடு, கிணறு, குகை, இரவு நேர சேஸிங் காட்சிகள் என கேமரா கோணங்கள் கவனிக்க வைக்கிறது. இசையமைப்பாளர் மனோஜ் திகில் கதைக்கு ஏற்ப பின்னணி இசை கொடுத்திருக்கிறார்

காதல் கதையாக ஆரம்பித்து விறுவிறுப்பான பேய் கதையாக முடித்திருக்கிறார் இயக்குனர்டென்னிஸ் மஞ்சுநாத். திரைக்கதையில் இன்னும் வேகம் இருந்திருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com