"நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஒரு அரிய செல்வம்" - சுவாசிகாவை பாராட்டிய சூரி

நடிகை சுவாசிகாவுடன் நடித்தது நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது என சூரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி 'மாமன்' படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கிய இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமியும், அக்காவாக சுவாசிகா நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை சுவாசிகாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "என் அன்பும் நன்றிகளும் கிரிஜா அக்காவுக்கு, மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி என ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அந்த உணர்ச்சிகள்தான் இந்தப் படத்தின் சிறப்பை உருவாக்கியது.
உங்களோடு நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது. நிச்சயமாக, நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஒரு அரிய செல்வம். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.






