நீ எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..அசினின் கணவர் நெகிழ்ச்சி பதிவு


நீ எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..அசினின் கணவர் நெகிழ்ச்சி பதிவு
x

உன்னுடைய வாழ்நாள் முழுவதும் உன் அருகிலேயே நான் என்றும் இருக்க வேண்டும் என அசினின் கணவர் ராகுல் சர்மா கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குநர் ஜீவாவின் "உள்ளம் கேட்குமே" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின். அந்தப் படம் தாமதமாக, நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படம் முதலில் வெளியானது. பின்னர் அவர் நடித்த "கஜினி" படம் மிகப்பெரிய வெற்றிபெற்று அவரை தமிழின் முன்னணி நாயகியாக உயர்த்தியது. தொடர்ந்து விஜய்யுடன் "சிவகாசி", "போக்கிரி", "காவலன்", அஜித்துடன் "ஆழ்வார்", "வரலாறு", சூர்யாவுடன் "வேல்", கமலுடன் "தசாவதாரம்" உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்தநிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு அசின் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு ஆரின் என்ற ஒரு மகள் இருக்கிறார். தற்போது அசின் தம்பதி 10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

10வது திருமண நாளை முன்னிட்டு அசினின் கணவர் ராகுல் சர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் "மகிழ்ச்சியான 10 ஆண்டுகள்..." என்று கூறி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் வாழ்க்கையில் முக்கியமான எல்லாவற்றிற்கும் நீயே ஒரு அற்புதமான இணை நிறுவனர். உனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு துணை நடிகனாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்! நீ எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

இனிய 10-ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் என் அன்பே. ஒரு வளரும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைப் போல, நீ நம் வீட்டையும் என் இதயத்தையும் திறம்பட வழிநடத்த வேண்டும். உன்னுடைய வாழ்நாள் முழுவதும் உன் அருகிலேயே நான் என்றும் இருக்க வேண்டும். சிறந்த எதிர்காலத்தை நோக்கி நாம் இணைந்து பயணிப்போம்! என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story