நான் பார்த்து பொறாமைப்படும் நடிகர்களுள் ஒருவர் நீங்கள் - ஜோஜு ஜார்ஜை பாராட்டிய கமல்

‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பேசியதை கேட்டு நடிகர் ஜோஜு ஜார்ஜ் கண் கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது..
சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் யூடியூபில் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.'தக் லைப்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. நடிகர் சிம்பு, திரிஷா, கமல்ஹாசன் , அபிராமி என பலரும் படத்தை பற்றி பேசினர். அப்பொழுது கமல்ஹாசன் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார். அதை கேட்ட ஜோஜு ஆனந்தத்தில் கண் கலங்கினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் கூறியதாவது " நான் 30-க்கு மேற்பட்ட இரட்டை வேடங்கள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன் ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உருவத்தில் ஏதோ ஒரு மாறுபாடு இருக்கும். ஆனால் ஜோஜு நடித்த இரட்டா படத்தில் அவர் ஒரு காவல் நிலையத்திற்குள் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். அவர் எந்த ஒரு உருவ மாறுபாடும் இல்லாமல் அதில் நடித்து இருப்பார். நான் பொறாமைப்படும் நடிகர்களுள் ஜோஜு ஒருவர்" என கூறினார்.






