பெரியாரை திட்டினால் மட்டும் பிரபலம் ஆகிவிட முடியாது: மாரி செல்வராஜ்

பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆகி விட முடியாது என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது:
“பெரியாரை எனக்குள் ஆழமாக கொண்டு போய் சேர்த்தது என்னுடைய மனைவிதான். வீட்டுக்கு போனால் பெரியார் புத்தகங்கள்தான் அதிகமாக இருக்கும். அப்போது அது எனக்கு புதுசாக இருந்தது. காலத்தின் கட்டாயம் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஏன் அந்த வீட்டிற்குள் சென்றேன் என்பதும் தெரியவில்லை.
நீங்கள் நம்ப மாட்டீர்கள். நாங்கள் இரண்டு பேருமே சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறோம். நான் அந்த வீட்டிற்குள் எந்தத் தடையும் இல்லாமல் போனேன். எல்லாருக்கும் ஆச்சரியம். ‘உன்னை எப்படி அந்த வீட்டிற்குள் விட்டார்கள்?’ என்று கேட்டார்கள். ஏனெனில் அந்த வீட்டில் பெரியார் இருந்தார்.
நெல்லையில் வளர்ந்த ஒரு பையன், நெல்லையின் தென்கோடி கிராமத்தில் வளர்ந்த பையனுக்கு சேலத்தில் பிரமாண்டமாக கல்யாணம் செய்து வைத்தார்கள். நான் அப்பா, அம்மா, நண்பர்கள் என யாரையும் அழைத்துக் கொண்டு போய் பெண் கேட்கவில்லை. ஒரு மிகப் பெரிய யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டு தான் போனேன். எப்படி பேசுவது, எப்படி ஓடுவது, எப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பது என எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு சென்றேன்.
உள்ளே போனவுடன் உட்கார்ந்து பார்த்தால், அந்த வீட்டில் பெரியார் படம் மாட்டியிருந்தது. அப்போதே ‘தப்பித்தோம்’ என்று நினைத்தேன். அன்றிலிருந்து அந்த வீடு என்னுடைய வீடாக மாறிவிட்டது.
நான் இப்போது பெரியாரைப் பற்றி படித்து வைத்து ஏதாவது பேசுகிறேன் என்று வைத்துக் கொண்டால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மிகச் சிறப்பாக பேசுவேன். பெரியாரை எதிர்த்தே நான் பிரபலமாக முடியும். நன்றாக பேசக் கற்றுக்கொள்ள முடியும். மிகப் பெரிய தெம்பு வந்து விடும். என்னுடைய பேச்சுக்கு பாராட்டு கிடைத்து விடும்.
அந்த தெம்பும், திராணியும் என்ன செய்யும் என்றால், நாம் யாரிடமிருந்து கற்றுக் கொண்டோமோ, அவர்களைப் பற்றி பேசும்போதுதான் நாம் பெரிய ஆளாக முடியும். ஆசானை மீற வேண்டும் என்பது, அவர்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல. ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும்.
பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளர் ஆகி விட முடியாது. அவரை புரிந்து கொண்டு, அவர் எந்த மாதிரியான சமூகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் விதைக்க ஆசைப்பட்டாரோ, அதைச் செய்ய வேண்டும். நாம் எதை மக்களிடம் கொடுக்கிறோம் என்பது முக்கியம். வன்மம், பிரிவினை, வெறுப்புணர்வை கொடுப்பது சாதனை கிடையாது” என்றார்.






