ரூ 5000 க்கு நீங்கள் விற்கும் ஓட்டால் 5 வருட நல்லாட்சியை இழக்கிறீர்கள் - இயக்குநர் சேரன்

வாக்குக்காக பணம் தர வரும் அரசியல்வாதிகளை விரட்டுங்கள் என்று வாக்காளர்களை வேண்டி சேரன் பதிவிட்டுள்ளார்.
ரூ 5000 க்கு நீங்கள் விற்கும் ஓட்டால் 5 வருட நல்லாட்சியை இழக்கிறீர்கள்  - இயக்குநர் சேரன்
Published on

வருகிற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.சு, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ‘நாம் தமிழர் கட்சி’க்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார் இயக்குநர் சேரன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவர் சாடி, “வீரவசனம் பேசாம கொள்கை குறித்து பிரசாரத்தில் பேசுங்கள்” என பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சேரன் தனது எக்ஸ் பதிவில் “வாக்கு என்பது நம் உரிமை.. அதை விற்கக்கூடாது.. 5000 க்கு நீங்கள் விற்கும் ஓட்டால் 5 வருட நல்லாட்சியை இழக்கிறீர்கள்.. அரசால் எல்லோருக்கும் கிடைக்கும் எல்லா வசதிகளையும் முடக்குகிறீர்கள்.. எதிர் கேள்வி கேட்க ஆளில்லாத நிலையால் ஊழலையும் லஞ்சத்தையும் தலைவிரித்து ஆட வழி அமைத்து கொடுக்குறீர்கள்.. ஆகையால் வாக்களர்களே... உங்கள் உரிமையை கை உயர்த்தி இப்படித்தான் இனி வாக்காளிப்போம் என உரக்க கூறி உங்களிடம் வாக்குக்காக பணம் தர வரும் அரசியல் பிரமுகர்களை விரட்டுங்கள்... மாற்றம் கண்டிப்பாக நிகழும்... அது நீங்கள் விரும்பும் ஆட்சியாக மலரும்..

வாரிசு அரசியல் வேண்டாம் என்று தானே மன்னராட்சியை ஒழித்தோம். கருணாநிதி ஐயா, ஸ்டாலின் ஐயா, உதயநிதி ஐயா என்று வருகிறார்களே, இதுவே முரண்பாடாக இல்லையா? ஊழல், அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் பெருகிக் கிடக்கிறது. போதைப்பொருள் சாதாரணமாக மாணவர்களிடம் புழங்குகிறது என்கிறார்கள். மலைகளை வெட்டி இல்லாமல் செய்துவிட்டார்கள். ஆற்றுமணலைக் காணவில்லை. இவற்றையெல்லாம் யார் செய்தது... நாம் ஏன் இதை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது... இது இரு தலைமைகளில் நடந்தது உண்மை என்றால், மாற்றுத் தலைவனைக் கண்டுபிடிக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க-தான் இங்கே ஆள வேண்டும் என்று யாரும் எழுதிக் கொடுக்கவில்லை. சுமார் 60 வருடங்களை இரண்டு பேருக்கும் கொடுத்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com