

சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டோனி. 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
இதற்கிடையே, 2024-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய டோனி, அந்தப் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். இருப்பினும், ஒரு வீரராக அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த டோனி, ரசிகர்களால் 'தல' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றதாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு இளைஞன் நம் கண் முன்னே ஜாம்பவானாக வளர்ந்ததைப் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். டோனி சார், 7 என்ற எண் என்பது வெறும் எண்ணைத் தாண்டியது. சென்னையைப் பொறுத்தவரை அது எண்ணற்ற உணர்வுகள், மறக்க முடியாத வெற்றிகள் மற்றும் கடைசி வரை நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதை உணர்த்திய அற்புதமான தருணங்களைக் குறிக்கிறது.
உங்களது ஆட்டத்தால் மட்டுமின்றி, பணிவு, கண்ணியம் மற்றும் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நீங்கள் நடந்துகொண்ட விதத்தாலும் ஒரு தலைமுறைக்கே உத்வேகமாகத் திகழ்ந்துள்ளீர்கள். உங்களது பயணம் எங்கு சென்றாலும், நீங்கள் எப்போதும் எங்கள் தலதான். உங்களுக்கு எனது அன்பும், வாழ்த்துகளும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டோனியின் கிரிக்கெட் பயணம் குறித்து நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ள இந்தப் பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சென்னைக்கும் டோனிக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது கருத்துகள் அமைந்துள்ளன.