

சென்னை,
நடிகர் சக்தி வாசு நடித்துள்ள 'அனலி' திரைப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அந்த வீடியோவில் அவரது தோற்றம், உடல் எடை மற்றும் ஆடைத் தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் பதிவிட்டனர். இந்நிலையில், அந்த விமர்சனங்களுக்கு நடிகர் சக்தி வாசு தனது சமூக வலைதள பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் பி. வாசுவின் மகனான சக்தி வாசு, குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 'நடிகன்', 'ரிக்ஷா மாமா', 'சின்ன தம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், பின்னர் 'தொட்டால் பூ மலரும்', 'யுவன் யுவதி', 'ஏதோ செய்தாய் என்னை', 'தற்காப்பு', 'சிவலிங்கா', '7 நாட்கள்' உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
தற்போது சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா இயக்கியுள்ள 'அனலி' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் அவரது தோற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக்தி வாசு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "விரைவில் என்னை பார்ப்பீர்கள். உடற்பயிற்சியைத் தொடங்கும்போது என் மன உறுதி மிக அதிகமாக இருக்கும். இது 'கராத்தே பாபு'வுக்காக. அதே சமயம் என்னைத் தூண்டிவிடுபவர்களுக்கும் நன்றி. அது எனக்கு பெரிய உந்துதலை அளிக்கிறது. இது எனக்குப் புதிதல்ல. தூண்டுதலுக்கே ஒரு தூண்டுதலாக (Trigger-ukke Trigger-a) இருப்பவன் நான்தான். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. விரைவில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் 'கராத்தே பாபு' திரைப்படத்தில் சக்தி வாசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்திற்காகவே அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.