

கடந்த 2010-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக தனுஸ்ரீ தத்தா அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த தனுஸ்ரீ தத்தா தனது வெளிப்படையான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அடிக்கடி டிரெண்டிங்காக இருந்து வருகிறார். தொடர்ந்து ‘தூள்’, ‘ரிஸ்க்’, ‘குட் பாய் பேட் பாய்’ என பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். தனுஸ்ரீ தத்தா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ‘சூப்பர்காப்ஸ் Vs சூப்பர் வில்லன்ஸ்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் சினிமாவிலிருந்து விலகினார்.
இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலிவுட் திரையுலகின் இருண்ட பக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.பல்வேறு கனவுகளுடன் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் இளம் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக அண்மையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “சினிமாவில் புதிதாக யாராவது நுழைந்தால், முதலில் அவர்களிடம், ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். நட்சத்திர ஹீரோயினாக வருவீர்கள்’ என்று ஆசை வார்த்தை கூறி வலை வீசுவார்கள். மேலும், உங்கள் திறமைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், ‘அங்க அவர போய் பாருங்க. இங்க இவரு போய் பாருங்க’ என கூறி இளம் பெண்களை தவறாக வழிநடத்தி திசை திரும்பும் சம்பவங்கள் பாலிவுட்டில் நடந்து வருகின்றன.
ஆண்களும், பெண்களும் பாலிவுட்டை நோக்கி வருகிறார்கள். ஆனால், அவர்கள் பயன்படுத்தப்பட்டு, பின்னர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டு இறுதியில் தூக்கி வீசப்படுகிறார்கள். அவர்களின் கனவுகளும் தூக்கி வீசப்படுகின்றன. அப்படி கனவுகளுடன் வந்தவர்கள் தூக்கி வீசப்படும்போது, அவர்கள் மீள முடியாத துயரத்துக்கு ஆளாகின்றனர். பின்னர் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். சில மன ரீதியாக மொத்தமாக உடைந்து போய், கனவுகளை கைவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பிவிடும் அவல நிலைதான் உள்ளது” என நடிகை தனுஸ்ரீ தத்தா வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.