

சென்னை,
தமிழகத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் இர்பான். இவர் தமிழகத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு அதற்கு ரிவ்யூ கொடுத்து பிரபலமானார்.
இதனிடையே, யூடியூபர் இர்பான் கடந்த 2024ம் ஆண்டு தனது மனைவி ஆசிபா கர்ப்பமான இருந்தபோது துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு மனைவியின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை கண்டறிய மருத்துவமனையில் பரிசோதனை நடத்தியுள்ளார். பின்னர், துபாயில் வைத்து கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை விழா நடத்தி அறிவித்தார். தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போவதாக அறித்தார். இதை தனது யூடியூப் பக்கத்திலும் பதிவிற்றம் செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தியாவில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவதும், அதை அறிவிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதனால், மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
ஆனால், கடந்த திமுக ஆட்சியின் இர்பான் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு இர்பான் மன்னிப்புக்கடிதம் மட்டும் கொடுத்தார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை இர்பான் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இர்பான் மீதான விசாரணையும் கடந்த திமுக ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டது. இர்பான் மீது எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளை, இர்பானுக்கு கடந்த 2024 ஜுலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, இந்த விவாரத்தில் விசாரணையை சுகாதாரத்துறை முடித்து வைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் வந்தது. அப்போது கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை இர்பான் அறிவித்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இர்பானுக்கு சம்மன் அனுப்ப மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வழக்கில் இர்பானிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.