"மகனின் துரோகம்... மருமகளின் பழிவாங்கல்: மனதை உலுக்கும் ‘சாருகேசி - சினிமா விமர்சனம்

'அண்ணாமலை', 'பாட்ஷா' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் புதிய படைப்பு.
"மகனின் துரோகம்... மருமகளின் பழிவாங்கல்:  மனதை உலுக்கும் ‘சாருகேசி - சினிமா விமர்சனம்
Published on

துயரங்கள்

கர்நாடக சங்கீதத்தில் ஜாம்பவானாக திகழும் ஒய்.ஜி.மகேந்திரன் இசையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து கலக்கி வருகிறார். இதற்கிடையில் ஞாபக மறதி நோயால் அவதிக்கு ஆளாகிறார் தனது மனைவி சுஹாசினியையே மறக்கும் நிலைக்கு செல்கிறார்.

இந்தநிலையில் அவரது ஒரே மகன் ராஜ் அய்யப்பன், காதலி ரம்யா பாண்டியனை திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வருகிறார். வேறு வழியின்றி மகனின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு அதன்பிறகு துயரங்கள் சூழ்ந்து கொள்கிறது.

மருமகளின் பழிவாங்கல்

ஒய்.ஜி.மகேந்திரன் - சுஹாசினி தம்பதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை ரம்யா பாண்டியன் சொல்லி மிரட்ட தொடங்குகிறார். இந்த பழிவாங்கும் படலத்தில் ரம்யா பாண்டியனுடன், ராஜ் அய்யப்பனும் சேர்ந்து கொள்கிறார். மகனின் செயலால் வேதனையோடு வாழும் ஒய்.ஜி.மகேந்திரா, திடீர் மருமகளின் இந்த பழி வாங்கும் நோக்கத்தால் என்ன ஆனார்? அந்த ரகசியம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

சாருகேசி என்ற கதாபாத்திரத்தில் இசை மேதையாகவே வாழ்ந்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா. புகழ்பெற்ற இசைக்கலைஞர், சொந்த வீட்டில் அவமானங்களை சந்திக்கும் தந்தை என்ற இருவேறு பரிமாணங்களில் மிரட்டியுள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சளைக்காத நடிப்பிலும், அனுபவத்தாலும் சுஹாசினி கவர்கிறார். கண்களிலேயே வசனம் பேசும் அவரது நடிப்பு அலங்காரம்.

ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் இருவரும் வயதுக்கு ஏற்ற துள்ளலோடு நடிப்பில் மிளிர்கிறார்கள். ஆத்திரமூட்டும் அவர்களின் நடிப்பு கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்க்கிறது. சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், தீனா ரித்விக், ப்ரீதிகா என அனைவருமே நல்ல தேர்வு.

மனம் ஈர்க்கும் படைப்பு

பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவில் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது. தேவாவின் இசையில் கர்நாடகா சங்கீதம் கலக்கல். பழைய நினைவுகளை தட்டி எழுப்பிய இடங்களும் அருமை. எதார்த்த நடிப்பும், வசனங்களும் படத்துக்கு பலம். சில இடங்களில் காட்சிகளில் நாடகத்தனம் எட்டிப்பார்க்கிறது.

ஒரு இசை கலைஞரின் புகழ், சாதனைகள் தாண்டி, சொந்த வாழ்வில் அவருக்கு உண்டான வலி மற்றும் சோதனைகளை எதார்த்தமாக சொல்லி, மனம் ஈர்க்கும் படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. எதார்த்தங்களின் குவியல்.

X

Daily Thanthi
www.dailythanthi.com