ஆண் தேவதை

கதை நாயகன் சமுத்திரக்கனி, நாயகி ரம்யா பாண்டியன், டைரக்‌ஷன் தாமிரா, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவதால் ஏற்படும் விளைவுகள். படம் ஆண் தேவதை விமர்சனம் பார்க்கலாம்.
ஆண் தேவதை
Published on

கதையின் கரு: சமுத்திரக்கனியும், ரம்யா பாண்டியனும் கணவன்-மனைவி. இவர்களுக்கு ஆண்-பெண் என இரண்டு குழந்தைகள். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு போவதால், குழந்தைகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இரண்டு பேரில் ஒருவர் மட்டும் வேலைக்கு போவது-ஒருவர் வீட்டில் உட்கார்ந்து குழந்தைகளை கவனித்துக் கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

அதன்படி, ரம்யா பாண்டியன் சாப்ட்வேர் என்ஜினீயராக தன் வேலையை தொடர்கிறார். சமுத்திரக்கனி வீட்டில் உட்கார்ந்து குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார். இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கு வெளிநாடு போய் வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும்...ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது. இதற்காக உயர் அதிகாரியின் உதவியை நாடுகிறார். அந்த உயர் அதிகாரி ரம்யா பாண்டியனை அனுபவிக்க துடிக்கிறார்.

அவர் கொடுக்கும் விருந்தில் ரம்யா பாண்டியன் கலந்துகொண்டு மது அருந்துகிறார். வீட்டுக்கு தள்ளாடியபடி வரும் ரம்யா பாண்டியனுக்கு சமுத்திரக்கனி புத்திமதி சொல்கிறார். இருவருக்கும் இடையே ஏற்படும் வாக்குவாதம், சண்டையாக மாற-சமுத்திரக்கனி மகள் மோனிகாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

அதன்பிறகு ரம்யா பாண்டியன் என்ன ஆகிறார்? அவருடைய ஆடம்பர வாழ்க்கை எதில் போய் முடிகிறது? வீட்டை விட்டு வெளியேறிய சமுத்திரக்கனி மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா? என்பது மீதி கதை.

படத்தின் ஆண் தேவதை சமுத்திரக்கனிதான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ வேண்டும் என்று விரும்புகிற ஒரு நேர்மையான குடும்ப தலைவராக வாழ்ந்திருக்கிறார். பார்ட்டிக்கு போன இடத்தில், மகள் மீது பேட் டச் செய்தவனை இவர் அடித்து உதைக்க-இவரை அதே வேகத்தில் ரம்யா பாண்டியன் அறைய-அதை நினைத்து அவர் வேதனைப்படுவது, வீட்டை விட்டு வெளியேறுவது-அழுகிற மகளைப் பார்த்து அவளையும் தன்னோடு அழைத்து செல்வது ஆகிய காட்சிகளில், சமுத்திரக்கனி நெகிழ வைக்கிறார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் மனைவி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார், ரம்யா பாண்டியன். வங்கி கடன் வசூலிக்கும் தாதாவிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் இடத்தில், அனுதாபப்பட வைக்கிறார். சமுத்திரக்கனி-ரம்யா பாண்டியன் தம்பதியின் குழந்தைகளாக வரும் பேபி மோனிகா, கவின் பூபதி, தோழியாக வரும் சுஜாவாருணி, நண்பராக வரும் காளி வெங்கட், மனைவி மீது சந்தேகப்படும் இளவரசு ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

வங்கி கடனை வசூலிக்கும் தாதா ஹரீஷ் பேராடியும், அவருடைய நடவடிக்கைகளும் மிரள வைக்கின்றன. அவருடைய கடைசி கட்ட நடவடிக்கை முகம் சுளிக்க வைக்கிறது. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. ஜிப்ரான் இசையில் பாடல்களை விட, பின்னணி இசை கூடுதல் கவனம் பெறுகிறது.

தாமிரா டைரக்டு செய்து இருக்கிறார். நடப்பு சமுதாயத்தில் நிகழும் சம்பவங்களை கருவாக வைத்துக் கொண்டு உயிரோட்டமான சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறார், தாமிரா. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஆண்-பெண்களை குறிவைத்து வங்கி கடன் கொடுப்பதும், அதை வசூல் செய்ய தாதாக்களை பயன்படுத்தும் விதமும், பதற்றமூட்டும் பயங்கரங்கள். சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறியபின் நடைபெறும் சம்பவங்களை இன்னும் அழுத்தமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கலாம். ஆண் தேவதை படமல்ல. ஒரு பாடம்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com