ஆரியின் “போர்த் ப்ளோர்” - சினிமா விமர்சனம்

எல்.ஆர்.சுந்தரபாண்டியன் இயக்கிய ‘போர்த் ப்ளோர்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
ஆரியின் “போர்த் ப்ளோர்” - சினிமா விமர்சனம்
Published on

சாப்ட்வேர் என்ஜினீயரான ஆரி அர்ஜூனன், மும்பையில் இருந்து பணிமாறுதலாகி சென்னைக்கு வருகிறார். சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். அந்த 4-வது மாடியில் அவரை தவிர யாருமே வசிக்கவில்லை. அங்கிருந்தபடியே தனது காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதற்கிடையில் அவருக்கு அடிக்கடி கனவு வருகிறது. சில அமானுஷ்ய விஷயங்களும் அரங்கேறுகின்றன.

கனவில் அவர் சந்திக்கும் நபர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் திடீரென காணாமல் போகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் அனைவருமே அந்த குடியிருப்பில் கொலை செய்யப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மை ஆரிக்கு தெரியவருகிறது. கனவு என்றாலும், நிஜத்தில் நடப்பது போல் இருக்கும் சம்பவங்கள் மூலம் தன்னை சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை அறிந்துக் கொள்ளும் ஆரி அதற்கான தீர்வுகளை நோக்கி புறப்படுகிறார். இறுதியில் என்ன ஆனது? அமானுஷ்ய சம்பவங்களுக்கும், ஆரிக்கு வரும் கனவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கு விடையாக நகருகிறது மீதி கதை.

சாப்ட்வேர் என்ஜினீயர் என்றாலும் ஒரு துப்பறிவாளராகவே பயணித்துள்ளார் ஆரி. மன போராட்டங்கள் ஒருபுறம், தன்னை சுற்றி நடக்கும் மர்மங்கள் என்ற இக்கட்டான சூழலில் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். அவரது நடிப்பு பெரிய பலம்.

அழகான மற்றும் அளவான நடிப்பால் பவித்ரா மற்றும் தீப்ஷிகா என இரண்டு நாயகிகளும் நிறைவு சேர்த்திருக்கிறார்கள். வில்லனாக சுப்பிரமணிய சிவா மிரட்டியுள்ளார். தலைவாசல் விஜய், ஆரியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி என அனைவருமே படத்தின் விறுவிறுப்புக்கு உதவியுள்ளார்கள்.

தரண்குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். திகில் காட்சிகளில் மிரட்டியுள்ளார். ஜெ.லக்‌ஷ்மண் ஒளிப்பதிவில் காட்சிகள் பயமுறுத்துகிறது. பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த புதுமையான திகில் காட்சிகள் பலம். லாஜிக் மீறல்கள் எட்டிப்பார்க்கின்றன.

திகில் பாணியிலான கதைக்களம் என்றாலும், அதில் எமோஷனல் காட்சிகளும் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன். திருப்பங்கள் நிறைந்த காட்சிகளும் படத்தை சுவாரசியமாக நகர்த்துகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com