பிறப்பால் அனைவரும் சமம்: 'நெஞ்சுக்கு நீதி' சினிமா விமர்சனம்

இந்தியாவில் இருக்கும் சாதிய அடுக்குகள் குறித்து பெரிய புரிதல் இல்லாத ஒரு காவல்துறை அதிகாரி, அவர் ஊரில் காணாமல் போன ஒரு பெண்ணை தேடுவது தான் ' நெஞ்சுக்கு நீதி'. பிறப்பால் அனைவரும் சமம் என சட்டம் சொல்வதை சமூகம் ஏற்கிறதா என்பதைச் சொல்லி முடிகிறது படம்.
பிறப்பால் அனைவரும் சமம்: 'நெஞ்சுக்கு நீதி' சினிமா விமர்சனம்
Published on

கலைஞர் கருணாநிதி வரலாற்று நூல் டைட்டிலில், அவருடைய பேரன் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம்.

நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத அந்த ஊருக்கு புதிய 'ஏ.எஸ்.பி'. யாக வருகிறார் உதயநிதி ஸ்டாலின். நேர்மையான போலீஸ் அதிகாரி. சாதிவெறி காரணமாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கும் அந்த ஊர் ஒரு புதிராக இருப்பதாக உணர்கிறார் உதயநிதி.

அவருக்கு ஊர் பிரமுகர் குணசேகரன் என்று ஒருவரை அறிமுகம் செய்து வைக்கிறார் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சக்ரவர்த்தி. குணசேகரன் நல்லவரல்ல என்று உதயநிதிக்குள் எச்சரிக்கை மணி அடிக்கிறது. இந்த நிலையில், அந்த ஊரை சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் 2 சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்படுகிறார்கள்.

மூன்றாவது சிறுமி சத்யா என்ன ஆனாள்? என்பது மர்மமாக இருக்கிறது. அவளை தேடும் முயற்சியில் உதயநிதி வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பது மீதி கதை.

உதயநிதி இன்றைய இளம் தலைமுறையின் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். 'விஜயராகவன்' என்ற அந்த கதாபாத்திரத்துக்கு அவர் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அலட்டலே இல்லாத மிக இயல்பான வசன உச்சரிப்பும், ஒரு இளைஞருக்கே உரிய உடல்மொழியும், அதிர்ந்து பேசாத எளிமையான சுபாவமும் விஜயராகவனுக்கு கண்ணியமும், கம்பீரமும் சேர்க்கின்றன.

உதயநிதியின் மனைவியாக-ஊடக நிருபராக தான்யா ரவிச்சந்திரன். இவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. இருப்பினும் அவர் வந்து போகிற காட்சிகளில், உணர்வுகளை மிக எளிதாக முகத்துக்கு கொண்டு வருகிறார்.

படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்தே 'குமரன்' என்ற கதாபாத்திரத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். எதிர்பார்ப்புக்குரிய அந்த கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன். தாழ்த்தப்பட்ட சாதி தலைவராக வந்து அவர்களுக்காகவே வாழ்க்கையை தியாகம் செய்கிற அனுதாபகரமான வேடத்தில் ஆரி அர்ஜுனன் மனதில் நிற்கிறார்.

தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணாக சிவானி ராஜசேகர், மோசமான இன்ஸ்பெக்டராக சுரேஷ் சக்ரவர்த்தி, போலீஸ் டிரைவராக மயில்சாமி, போலீஸ்காரராக இளவரசு, சி.பி.ஐ. அதிகாரியாக சாயாஜி சிண்டே மற்றும் சி.ரங்கநாதன், கும்கி அஸ்வின் என படத்தில் நிறைய நட்சத்திரங்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், டைரக்டர் அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் கைகோர்த்துக்கொண்டு படத்தின் வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். முதல் பாதி அதிவேகத்தில் கடந்து போகிறது. இரண்டாவது பாதியில் கொஞ்சம் வேக குறைவு.

ஒரு அதிரடி கதையம்சம் உள்ள படத்தில், அடிதடி காட்சிகளுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும், சண்டை காட்சிகள் வைக்காமலே விறுவிறுப்பாக கதை சொல்லியிருப்பதற்காக, டைரக்டரை கைகுலுக்கி பாராட்டலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com