

தமிழீழப் போராளியான ஆர்யா, இலங்கை ராணுவத்துடனான மோதலில் தப்பித்து கேரளாவில் தஞ்சம் அடைகிறார். அங்கு கேரள முதல்-மந்திரி விஜயராகவனுக்காக ரகசியமாக இயங்கி வரும் இந்திரன்ஸ் தலைமையிலான கூலிப்படையில் இணைகிறார். காட்டிலேயே பதுங்கி குற்ற சம்பவங்களில் ஈடுபடத் தொடங்குகிறார்.
இதற்கிடையில் தமிழகத்தில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்ய கூலிப்படையை ஏவுகிறார், விஜயராகவன். இந்த கொலை அரங்கேறும் முன்பாக ஆர்யா ஒரு கொலையை செய்துவிடுகிறார். அதன்பிறகு ஆர்யா என்ன ஆனார்? கூலிப்படையினரின் நிலை என்ன ஆனது? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
அளவான நடிப்பால் அசத்தியுள்ள ஆர்யா, ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியுள்ளார். அதிரடி நிறைந்த அவரது ஆக்ரோஷமான நடிப்பு கவனிக்க வைக்கிறது. எதார்த்தமான நடிப்பை காட்டி ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல் கவர்கிறார்கள். வித்தியாசமான அவர்களின் நடிப்புக்கு பாராட்டலாம்.
கூலிப்படையினராக முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத் ஆகியோர் பொருத்தமான தேர்வு. இந்திரன்ஸ்-ன் இன்னொரு முகம் ஆச்சரியம். போலீஸ் அதிகாரியாக சுனில், முதல்-மந்திரியாக விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், அச்யூத்குமார் என அனைவரின் நடிப்பிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா 90களின் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்துகிறது. பி.அஜனீஸ் லோக்நாத்தின் இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. அழுத்தமான காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதை பல இடங்களில் திசை மாறியிருப்பது பலவீனம். தேவையில்லாத காட்சிகளுக்கு 'கத்தரி' போட்டிருக்கலாம். லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கம். சர்ச்சையான காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இக்கதையில் சில கமர்ஷியல் விஷயங்களையும் புகுத்தி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார்.