அறம்

அறம் - ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்ற போராடும் ஒரு பெண் கலெக்டர், நயன்தாரா நடித்த படத்திற்கான விமர்சனம்.
அறம்
Published on

கதையின் கரு: ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு பக்கத்து கிராமத்தில், கூலி வேலை செய்து பிழைக்கும் ராமு-சுனுலட்சுமி தம்பதியின் பெண் குழந்தை விளையாடும்போது ஆழ்துளைக்கிணற்றுக்காக தோண்டிய குழியில் விழுந்து விடுகிறது. ஊர் மக்கள் பதறுகிறார்கள்.

அந்த மாவட்ட கலெக்டர் நயன்தாராவுக்கு தகவல் பறந்ததும் விரைந்து வருகிறார். குழியை மூடத்தவறிய ஆளும் கட்சி கவுன்சிலரை கைது செய்ய உத்தரவிடுகிறார். குழிக்குள் ஆக்ஸிஜன் செலுத்தி குழந்தையிடம் பேசுகிறார். கயிற்றை குழிக்குள் செலுத்தி சிறுமி அதை பிடித்துக்கொள்ள மேலே இழுக்கிறார்கள். பாதி தூரம் வந்ததும் கயிற்றை விட்டு விட இன்னும் ஆழத்தில் போய் விழுகிறது.

அருகிலேயே இன்னொரு குழி தோண்டி சிறுமியை மீட்க முயல்கின்றனர். ஆனால் மண்சரிவு ஏற்படும் அபாயத்தால் அதுவும் கைவிடப்படுகிறது. கடைசி முயற்சியாக ஒரு சிறுவனை தலைகீழாக குழிக்குள் இறக்கி, குழந்தையை மீட்க நயன்தாரா முயல்கிறார். அது ஆபத்தானது என்று பலரும் எதிர்க்கின்றனர். சிறுமி மீட்கப்பட்டாளா என்பது உச்சகட்ட திக் திக்...
குடிநீருக்காக அலையும் மக்களின் அவலங்கள், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க ஒரு கலெக்டர் எடுக்கும் முயற்சிகள், அரசியல் குறுக்கீடுகள் மற்றும் நிர்க்கதியற்ற ஏழைகளின் கோபங்களை உயிரோட்டமாக தொகுத்து தரமான படமாக தந்து இருக்கிறார் டைரக்டர் கோபி நயினார்.

கலெக்டர் மதிவதனி கதாபாத்திரத்தில், நயன்தாரா. குடிதண்ணீருக்காக சாலையை மறிக்கும் மக்கள் மத்தியில் கனிவோடு பேசும் பாங்கு, மக்கள் பணிகளில் அதிகாரிகளை முடுக்கி விடும் வேகம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் தவிப்பு என்று உணர்ச்சிப் பிழம்பாகவே மாறி இருக்கிறார்.

அந்த கடைசி காட்சியில் கடவுளை வேண்டி கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழும்போது, தியேட்டரில் இருக்கும் மொத்த கூட்டமும் அவருடன் சேர்ந்து அழுகிறது. குழிக்குள் இறங்க பயப்படும் சிறுவனிடம், நிலாவில் கால் வைப்பதை விட, பெருமை நீ ஆழ்துளைக் கிணற்றுக்குள் போய்விட்டு திரும்புவது என்று உசுப்பேற்றுவது, மேலதிகாரியிடம், மக்களுக்கு தேவையானதைத்தான் சட்டமாக்க வேண்டும் என்பது போன்ற பல வசனங்கள் கதைக்கு வலுசேர்த்துள்ளன.

அரசியல் நெருக்கடியால் மக்களுக்கு சேவை செய்ய முடியாத கலெக்டர் பதவியை உதறி விட்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து, மதிவதனியாகிய நான்.. என்று பதவி ஏற்பது போல் குரலை மட்டும் பதிவு செய்து பின்னணியில் நயன்தாரா மிடுக்காக நடந்து வருவது போன்று படத்தை முடித்து இருப்பது, கைதட்ட வைக்கிறது.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை, சிறுமி குழிக்குள் விழுந்த பிறகு வேகம் பிடிக்கிறது. சிறுமியின் தாய், தந்தையாக ராம், சுனுலட்சுமி வாழ்ந்து இருக்கிறார்கள். குழிக்குள் விழுந்த சிறுமி பயத்தை இயல்பாக வெளிப் படுத்தி மனதை நெகிழ வைக்கிறார். பிரபலமில்லாத ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையில் இருந்து பிரிக்க முடியாதபடி கலந்து இருக்கிறது. ராக்கெட் ஏவும் அறிவியல் வளர்ச்சியையும், குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்க உபகரணங்கள் இல்லாத அவலத்தையும் அருகருகே கதைக்களமாக வைத்து இருப்பது, டைரக்டர் முத்திரை. ஓம்பிரகாஷ் கேமரா வறண்ட நிலத்தில் நடக்கும் உயிர்மீட்பு போராட்டத்தை கண்கலங்க பதிவு செய்கிறது. ஜிப்ரான் பின்னணி இசை, கதையோடு ஒன்ற வைக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com