ஆர் யூ ஓகே பேபி : சினிமா விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி : சினிமா விமர்சனம்
Published on

ஏழ்மை நிலையில் இருக்கும் அசோக், முல்லையரசி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள்.

இதில் கர்ப்பமாகும் முல்லையரசி குழந்தையை பெற்று எடுத்து, குழந்தை இல்லாத தம்பதியான சமுத்திரக்கனி, அபிராமிக்கு தத்து கொடுத்து விடுகிறார்.

சில வருடங்களுக்கு பிறகு தத்து கொடுத்த குழந்தையை திருப்பி வாங்க முல்லையரசி முயற்சிக்கிறார். அதற்கு உதவும்படி டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனை நாடுகிறார். அவரும் குழந்தையை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்.

பிரச்சினை கோர்ட்டுக்கு செல்கிறது. சட்ட போராட்டத்தில் குழந்தை யாருக்கு சொந்தமானது என்பது மீதிக்கதை.

சமுத்திரக்கனி குழந்தை இல்லாத தந்தையின் ஏக்கத்தை உணர்வுகளால் வெளிப்படுத்தி உள்ளார். அதை மிகக் கவனமாக கையாண்டு கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார். நடிப்பும் கச்சிதம்.

பிள்ளைவரம் இல்லாத பெண்ணின் வலியை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ள அபிராமியின் நடிப்பு அபாரம். குழந்தைக்கு பால் கொடுத்து உருகும்போது காண்போரை நெகிழ வைக்கிறார்.

திருமணம் ஆகாமல் அம்மாவாகும் முல்லையரசிக்கு கனமான வேடம். வயதுக்கு மீறிய அந்த வேடத்தில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து மிரள வைக்கிறார். குழந்தையை அடைவதற்காக நடத்தும் போராட்டங்களில் உணர்ச்சிகரமாக நடித்து இருப்பது அருமை.

காதலனாக வரும் அசோக், டி.வி. நிகழ்ச்சி நடத்துபவராக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் மிஷ்கின், நீதிபதியாக வரும் ஆடுகளம் நரேன், அனுபமா ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை நிறைவாக வழங்கி உள்ளனர்.

இளையராஜாவின் இசை படத்துக்கு யானை பலம். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் மெல்லிய இசையால் மனதை கனக்க செய்கிறார்.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ண சேகர் கதையோடு பயணித்து ஒளிப்பதிவு செய்துள்ள விதம் அம்சம். சில காட்சிகள் முழுமை இல்லாமல் அவசரகதியில் முடிவது பலகீனம்.

குழந்தையில்லாத தம்பதியர் சந்திக்கும் பிரச்சினைகளை சினிமாத்தனம் இல்லாமல், சமரசம் இல்லாமல், யதார்த்தமாகவும், துணிச்சலாகவும் சொல்லியிருப்பது படத்தின் பலம்.

குழந்தை தத்தெடுப்பு சிக்கலாகும்போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும், அதற்கான தீர்வையும் சமூக அக்கறையுடன் சொல்லி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com