மகன் சம்மதத்தின் பேரில், விஷ ஊசி போட்டு தந்தை கொலை - பாரம்

"பாரம்" தேசிய விருது பெற்ற படம். இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' திரைப்படத்தின் விமர்சனம்.
மகன் சம்மதத்தின் பேரில், விஷ ஊசி போட்டு தந்தை கொலை - பாரம்
Published on

கதை ஒரு சின்ன கிராமத்தில் நடக்கிறது. ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் காவல்காரராக இருந்து வருபவர், கருப்பசாமி. அறுபது வயதை தாண்டிய அவர், ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில், அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து போகிறது. பக்கத்து டவுனில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள்.

அவரை பரிசோதித்த டாக்டர், இடுப்பில் ஆபரேஷன் செய்து சிகிச்சை அளித்தால் குணமாகி விடும் என்கிறார். அதற்கு செலவாகும் என்பதால் அவருடைய மகன் செந்தில் ஆபரேஷனுக்கு சம்மதிக்க மறுக்கிறார். கிராமத்தில் நாட்டு வைத்தியம் செய்து கொள்ளலாம் என்று அப்பாவை ஒரு வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு சொந்த கிராமத்துக்கு போகிறார்.

வலியால் துடிக்கும் அப்பாவுக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல், அலட்சியப்படுத்துகிறார். இந்த நிலையில், பெரியவர் கருப்பசாமி திடீரென்று மரணம் அடைகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கருப்பசாமியின் மருமகன்கள் (சகோதரியின் மகன்கள்) சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அவர்களுக்கும், பெரியவரின் மகன் செந்திலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

மருமகன்களில் ஒருவரான வீரா போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார். பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுக்கிறார். அமைச்சர் கேட்டுக்கொண்டதால், கருப்பசாமியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று வழக்கை முடித்து விடுகிறார்கள். பத்திரிகை நிருபர்கள் துப்பறிந்து, கருப்பசாமிக்கு அவருடைய மகன் சம்மதத்தின் பேரில், விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள். இந்த விவகாரம் நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவுகிறது.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா, அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

கருப்பசாமியாக ஆர்.ராஜு நடித்து இருக்கிறார். விபத்துக்குள்ளாகி காயம் அடைந்த ஒரு முதியவரின் வலியையும், வேதனைகளையும் படுத்துக்கொண்டே வெளிப்படுத்துகிறார். இயற்கை உபாதைக்காக, செந்தில்...செந்தில்... என்று மகனை அழைக்கும்போது, ஒட்டு மொத்த பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.

அவரைப்போலவே ஒப்பனை எதுவும் செய்து கொள்ளாமல் கருப்பசாமியின் மகன் முத்துக்குமார், மருமகன்கள் சுகுமார் சண்முகம், சமராஜா, பிரேம்நாத், சகோதரியாக ஜெயலட்சுமி ஆகியோர் கிராமத்து மனிதர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

டைரக்டர் பிரியா கிருஷ்ணசுவாமி, இசையமைப்பாளர் வெட் நாயர், ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இயல்பான நடிப்பு, யதார்த்தமான காட்சிகள் மூலம் ஒரு கிராமத்தில், எளிய மனிதர்களுடன் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதில், டைரக்டரின் பங்கு நிறைய... சில காட்சிகளில், திருஷ்டி பரிகாரமாக நாடக வாசனை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com