"பாலன்" - சினிமா விமர்சனம்

இந்தப் படத்தின் கதையை 'ஆவேசம்' படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் எழுதியுள்ளார்.

"பாலன்" - சினிமா விமர்சனம்
Published on

'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த சிதம்பரத்தின் இரண்டாவது படம்.

சிறையில் இருந்து தனது மகன் ஆதிசேஷன் உடன் வெளியே வரும் பர்சானா, கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை ஓட்டுகிறார். தாங்கள் யார்? என்ற உண்மையை யாருக்கும் சொல்லாமல், தங்களது அடையாளங்களை மறைத்துக் கொண்டு ஒவ்வொரு வேலையாக செய்து இடம் மாறியே சென்று கொண்டிருக்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் பிரச்சினைகள் அவர்களை துரத்த ஒவ்வொரு இடமாக குடிபெயர்ந்து போகிறார்கள்.

அந்த வகையில் பர்சானாவுக்கு வயதான ஒரு மூதாட்டியை கவனித்துக் கொள்ளும் வேலை அமைகிறது. அந்த வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வரும் பர்சானா, தனது மகனையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். அந்த வீட்டிலும் அவருக்கு பிரச்சனைகள் வெடிக்கிறது ஒரு கட்டத்தில் அந்த மூதாட்டியும் இறந்து போகிறார்.

உண்மையிலேயே பர்சானா யார்? தனது அடையாளங்களை மறைத்து அவர் வாழ வேண்டிய அவசியம் என்ன? அவரை தொடர்ந்து பிரச்சினைகள் துரத்துவது ஏன்? இந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

அழுத்தமான நடிப்பால் படம் முழுவதும் கவனிக்க வைக்கிறார் பர்சானா. நம்பும்படியான பொய்களை கூறுவது, மகனின் எதிர்காலத்துக்காக கவலைப்படுவது என அசாத்திய நடிப்பை காட்டி அலங்கரிக்கிறார். சிறுவனாக ஆதிசேஷன் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டுகிறார். அவரது முக பாவனைகள் பேசாமலேயே வசனங்களை பேச வைக்கிறது.

சினான், ஜீன்பால் லால், கிரிஷ் ஏ.டி. என நடித்த அத்தனை பேரும் எதார்த்தமான நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார்கள். ஷைஜூ காலித் ஒளிப்பதிவும், சுஷின் ஷியாம் இசையும் படத்துடன் நம்மை பயணிக்க வைக்கிறது. எதார்த்தமான அழுத்தம் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் சில காட்சிகள் பெருமையை சோதிக்கின்றன.

யாருமே யோசிக்காத கதைகளத்தில் யோகிக்க முடியாத காட்சிகளை அடக்கி மீண்டும் ஒருமுறை தனது முத்திரையை பதித்துள்ளார் இயக்குனர் சிதம்பரம். இந்தப் படத்தின் கதையை 'ஆவேசம்' படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. கிளைமாக்ஸ் எதிர்பாராதது, வியப்பளிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com