"கார்மேனி செல்வம்" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் ராம் சக்ரி இயக்கிய "கார்மேனி செல்வம்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"கார்மேனி செல்வம்" திரைப்பட விமர்சனம்
Published on

சென்னை,

கார் டிரைவரான சமுத்திரக்கனி, வருமானத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. திடீரென நண்பர்கள் சிலரின் யோசனையால் கார், வீடு வாங்க ஆசைப்படுகிறார். இதற்காக பெரிய அளவில் கடன் வாங்குகிறார். அப்போது அவரை பெரும் திருப்பம் சூழ்கிறது. சிக்கல்களில் சிக்கி பரிதவித்து போகிறார்.

சமுத்திரக்கனி சந்தித்த சிக்கல் தான் என்ன? அந்த சிக்கலில் இருந்து அவர் மீண்டாரா, இல்லையா? அவர் நினைத்த வாழ்க்கை அவருக்கு அமைந்ததா, இல்லையா? என்பதே எதார்த்தங்கள் நிறைந்த மீதி கதை.

செல்வம் என்ற கதாபாத்திரத்தில் சராசரி மனிதனாக மிளிர்கிறார், சமுத்திரக்கனி. எளிய மனிதரிடம் உள்ள போராட்டம், இயலாமை, ஏமாற்றம், கோபம், ஆத்திரம் என அத்தனை உணர்ச்சிகளை எளிதாக கடத்தி, நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் லட்சுமிபிரியா சந்திரமவுலி, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பை வாரி வழங்கியுள்ளார். நடுத்தர குடும்பத்து பெண்மணியாக எதிரொலித்துள்ளார். அளவான வருமானமே போதும் என்ற மனநிலை கொண்டவராக, கணவரை மாற்ற முயற்சிக்கும் இடங்கள் அழகு.

சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கவுதம் மேனன், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா நல்ல தேர்வு. பல இடங்களில் கைதட்டல் உண்டு. சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தியும் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இதர நடிகர்-நடிகைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மியூசிக் கிளவுட் ஸ்டூடியோஸ் - டெக்னாலஜியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துடன் ஒன்ற செய்கிறது. எதார்த்தமான கதைக்களம் பலம். மெதுவாக நகரும் திரைக்கதை பலவீனம்.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழவேண்டும், ஆசையில் சிக்கி அவஸ்தை படக்கூடாது என்பதை சிந்திக்க வைக்கும்படி காட்சிகளை அடுக்கி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் ராம் சக்ரி.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com