குழந்தை திருட்டு - "ஜோதி" சினிமா விமர்சனம்

குழந்தை திருட்டை கருவாக கொண்ட படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
குழந்தை திருட்டு - "ஜோதி" சினிமா விமர்சனம்
Published on

 ஒரு மழை பெய்யும் இரவில் கதை தொடங்குகிறது. ஷீலா ராஜ்குமார் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருடைய கணவர், டாக்டர். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அவர் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்று விடுகிறார். இந்த நிலையில், ஷீலா ராஜ்குமார் வீட்டில் தனியாக இருக்கிறார். யாரோ மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து நிறைமாத கர்ப்பிணியான அவரின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து கடத்தி சென்று விடுகிறார். 

அந்த மர்ம நபர் யார்? என்பதுதான் மொத்த படமும். இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி வெற்றி விசாரணை நடத்துகிறார்.

ஷீலாவின் வீட்டில் வேலை செய்த ரங்கா, எதிர் வீட்டில் வசிக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண், சொத்து தகராறு செய்துவரும் தங்கை, ஷீலாவின் கணவர் உள்பட சிலர் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடக்கிறது. உண்மையான குற்றவாளி யார்? என்று தெரியவரும்போது, பேரதிர்ச்சி.

போலீஸ் அதிகாரியாக வெற்றி நடித்து இருக்கிறார். சக போலீஸ் அதிகாரி குமரவேலை உதவியாளராக வைத்துக்கொண்டு வெற்றி விசாரணை நடத்தும் விதம், துப்பறியும் நாவல் படிப்பது போல் இருக்கிறது. சந்தேகத்துக்குரிய நபர்களை பிடித்து விசாரணை நடத்துவதும், அவர் குற்றவாளி இல்லை என்று உறுதி செய்வதும் அடுத்தது யார்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

ஷீலா ராஜ்குமார் கர்ப்பிணி பெண்ணாக - வயிற்றில் இருந்த குழந்தையை பறிகொடுத்தவராக நிறைய அனுதாபத்தை சம்பாதிக்கிறார். கடைசி காட்சியில் அவர் மூலம் சஸ்பென்ஸ் உடைவது, யூகிக்க முடியாத காட்சி. குழந்தை பாக்கியம் இல்லாத கிரிஷா குரூப், மைம் கோபி, பிரியங்கா ருத், ராஜா சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.

 ஹர்சவர்தன் இசையில், பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், அந்த குறையை பின்னணி இசை சரி செய்து இருக்கிறது. சசி ஜெயாவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது.

படத்தை டைரக்டு செய்திருப்பவர், கிருஷ்ண பரமாத்மா. படத்தின் உண்மையான கதாநாயகன், திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்களுடன் டைரக்டர் கதை சொல்லியிருக்கிறார்.

 குழந்தை கிடைத்த பின், கதையை வளர்த்து இருப்பது, பொறுமையை சோதிக்கிறது. எப்போதாவது வரும் அபூர்வமான படங்களின் வரிசையில், 'ஜோதி' பிரகாசிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com