சினிமா விமர்சனம்: 4554

வாடகை கார் டிரைவரின் வாழ்க்கை சவால்களை பற்றிய கதை 4554.
சினிமா விமர்சனம்: 4554
Published on

பொள்ளாச்சியில் வாடகை கார் ஓட்டும் அஷோக், அதே ஊரை சேர்ந்த வசதியான வீட்டு பெண் ஷீலா நாயரை காதலிக்கிறார். இரு வீட்டாரும் காதலை ஏற்று திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்கின்றனர். நிச்சயதார்த்ததுக்கு முந்தைய நாள் அஷோக் நான்குபேரை சென்னைக்கு காரில் அழைத்துக்கொண்டு சவாரி செல்கிறார்.

நிச்சயதார்த்ததுக்கு வந்து விடுவதாக காதலியிடம் உறுதி அளிக்கிறார். காரில் இருப்பவர்கள் திடீரென்று ஏற்காடு போகச் சொல்கிறார்கள். அங்கு ஓட்டலில் தங்கி மது அருந்துகிறார்கள். மறுநாள் காலை அவர்களை சென்னைக்கு அழைத்துப்போய் விட்டு விட்டு பொள்ளாச்சிக்கு திரும்பும் வழியில் விதி விளையாடி மீண்டும் சென்னை செல்ல நிர்ப்பந்தம் வருகிறது.

இதனால் காதலி வெறுக்கிறாள். திருமணம் நடந்ததா? என்பது கிளைமாக்ஸ். வாடகை கார் டிரைவர் கதாபாத்திரத்தில் அஷோக் அனுபவ நடிப்பால் கவர்கிறார். காதல், கோபம், பொறுமை, ஆவேசம் என்று அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ள நடிப்பை குறைவில்லாமல் செய்துள்ளார். ரவுடிகளுடன் மோதும் சண்டையிலும் வேகம். கிளைமாக்சில் தன்னை அவமதித்தவருக்கும் உதவி செய்து கதாபாத்திரத்தில் உயர்ந்து நிற்கிறார். காரில் பயணிக்கும் கர்ணன் மாரியப்பன் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். துபாய் வேலைக்கு செல்பவர்களின் துயரமான கதையை அவர் விவரிக்கும் போது விழிகளில் நீர்முட்டுகிறது.

காரில் அஷோக்கை நக்கல் செய்தபடி வரும் கோதண்டன் காட்சிகளை கலகலப்பாக வைத்து இருக்கிறார். ஜோசியராக வரும் கிரேன் மனோகர் சிரிக்க வைக்கிறார். ஷீலா நாயர் திருமணம் நடக்காமல் போய் விடுமோ என்ற பதற்றம் காட்டுகிறார். ஜாகுவார் தங்கம், பெஞ்சமின், சரவண சக்தி, கம்பம் மீனா ஆகியோரும் உள்ளனர். பெரும்பகுதி கதை காரிலேயே நகர்வது சலிப்பை தருகிறது. கார் பயண காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம். வாடகை கார் டிரைவரின் வாழ்க்கை சவால்களை நேர்த்தியாக காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் கர்ணன் மாரியப்பன் கவனம் பெறுகிறார். ஒளிப்பதிவாளர் வினோத் காந்தியின் கேமரா ஓடும் காருக்குள் நடக்கும் சச்சரவுகளை அபாரமாக காட்சிப்படுத்தி உள்ளது. ரஷாந்த் அர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com