சினிமா விமர்சனம் - "அமரம்"

திருஅருள் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜன் தேஜஸ்வர் நடித்த "அமரம்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சினிமா விமர்சனம் - "அமரம்"
Published on

சென்னை,

சிறு வயதிலேயே தனது தாயை பறிகொடுத்து ஆதரவின்றி வாழ்ந்து வரும் ராஜன் தேஜஸ்வர், ​​மனதளவில் பாசம் அற்றுப் பணமே பிரதானம் என்று வாழத் தொடங்குகிறார். பணத்துக்காக கூலிப்படையில் சேர்ந்து கொலைகளையும் செய்கிறார்.

ராஜன் தேஜஸ்வரை ஒரு பணக்கார கும்பல் தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஊரில் உள்ள முக்கிய அரசியல்வாதியையும் தீர்த்து கட்டுகிறார்.

தந்தையை இழந்த ஐரா அகர்வால், அந்த ஊரில் செல்வாக்கு மிக்க எம்.எல்.ஏ. நாகிநீடுவுடன் ராஜன் தேஜஸ்வரை பழிதீர்க்க புறப்படுகிறார். ஆனால் செல்லும் வழியில் நாகிநீடுவின் நயவஞ்சகத்தால் ஐரா அகர்வால் ஆபத்தில் சிக்க, அவரை ராஜன் தேஜஸ்வர் காப்பாற்றுகிறார்.

ராஜன் தேஜஸ்வருடன் பழகும் ஐரா அகர்வாலுக்கு, அவர் வன்முறைக்கு மத்தியில் திருந்தி வாழ நினைப்பது தெரியவருகிறது. இதையடுத்து இருவரையுமே தீர்த்துக்கட்ட பெருங்கூட்டம் அவர்களை துரத்துகிறது. இருவரும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே மீதி கதை.

ராஜன் தேஜஸ்வர், முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். கரமுரடான பழங்குடியினர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, தனது அளவான நடிப்பின் மூலம் கலக்கியுள்ளார். துடிப்பான நடிப்பால் ஐரா அகர்வால் கவர்கிறார். பல காட்சிகளில் மேம்பட்ட நடிப்பை காட்டி ஸ்கோர் செய்துள்ளார்.

பழங்குடியின சமூகத்தின் தலைவராக ஜார்ஜ் மரியான், பழங்குடி மக்களை கூலிப்படையாக பயன்படுத்தும் சாய் தீனா, எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் பொருத்தமான தேர்வு. பரத் குமார் ஒளிப்பதிவில் காட்சிகளும், மிக்கி ஜே.மேயரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

விறுவிறுப்பான, திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம்.

வழக்கமான கதை என்றாலும், கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் அங்கு வாழும் மக்கள் என வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார் திருஅருள் கிருஷ்ணா. கிளைமேக்ஸ் காட்சி திருப்பம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com