வட சென்னை

வட சென்னையில் உள்ள தாதாக்களின் மோதல். கதாநாயகன் தனுஷ், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், டைரக்‌ஷன் வெற்றிமாறன் படம் வட சென்னை சினிமா விமர்சனம்.
வட சென்னை
Published on

கதையின் கரு: வட சென்னையின் கடலோர குடிசை பகுதியில் வசிப்பவர், அமீர். நல்லவர். குப்பத்துக்கே தலைவர் மாதிரி இருக்கிறார். சாலை விரிவாக்கத்துக்காக குடிசைகளை காலி செய்யும்படி அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு குரல் கொடுக்கிறார், அமீர். சமுத்திரக்கனியும், கிஷோரும் அதே குப்பத்து ரவுடிகள். இருவரும் பணத்துக்கு ஆசைப்பட்டு அமீரை கொலை செய்கிறார்கள்.

என் கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் என்று அமீரின் மனைவி ஆண்ட்ரியா சபதம் எடுக்கிறார். இதற்காக சமுத்திரக்கனியை இரண்டாவது கணவராக ஏற்றுக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியும், கிஷோரும் பிரிகிறார்கள். இருவரும் எதிரிகள் ஆகிறார்கள். அமீர் ஆதரவில் வளர்ந்த தனுஷ், சமுத்திரக்கனி கோஷ்டியில் சேருகிறார்.

ஜெயிலில் இருக்கும் கிஷோரை ஜெயிலுக்குள்ளேயே போட்டுத்தள்ள முயற்சிக்கிறார், தனுஷ். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பது மீதி கதை.

தனுஷ், நடை-உடை-பாவனை-வசன உச்சரிப்பு அத்தனையிலும் வட சென்னைவாசியாகவே வாழ்ந்திருக்கிறார். மீசை முளைக்காத இளமைப் பருவம், அப்பாவி இளைஞர், குத்து வெட்டுக்கு அஞ்சாத முரடர் என படத்தில் மூன்று முகம் காட்டுகிறார். சண்டை காட்சிகளில், அனல் பறக்கிறது. இவருக்கும், ஐஸ்வர்யா ராஜேசுக்குமான மோதலில் ஆரம்பிக்கும் காதல் ரசனை என்றால், இரண்டு பேரும் அவ்வப்போது உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பரிமாறி, விய(ர்)க்க வைக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ஏற்கனவே காக்கா முட்டையில் சென்னை தமிழ் பேசிய அனுபவம், இந்த படத்திலும் கை கொடுக்கிறது. அதற்காக, ஆபாச வசனம் பேசியிருக்க வேண்டாம். ஆண்ட்ரியா, வட சென்னை பெண்ணை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

குப்பத்து மக்களின் நலனில் அக்கறையுள்ள நல்ல மனிதராக அமீர். ஜீவனுள்ள கதாபாத்திரம். நடிப்பும் அப்படியே... ராதாரவி, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், பாவல் நவகீதன் ஆகியோரும் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.

பின்னணி இசை மூலம் மிரட்டியிருக்கிறார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். வட சென்னைக்குள் வாழ்ந்த பிரமிப்பை கொண்டு வந்து விடுகிறார், ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், வெற்றிமாறன். நிறைய கதாபாத்திரங்கள் மற்றும் நிறைய ரத்த சேதங்களை தவிர்த்து இருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com