சினிமா விமர்சனம்: நெடுநீர்

சினிமா விமர்சனம்: நெடுநீர்
Published on

அப்பாவின் குணம் சரியில்லாத காரணத்தால் நாயகன் ராஜ்கிருஷும், அம்மாவின் குணம் சரியில்லாமல் நாயகி இந்துஜாவும் சிறு வயதில் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பிரிந்தும் விடுகிறார்கள். ராஜ்கிருஷ் ஒரு தாதாவிடம் அடைக்கலம் ஆகி அடியாளாக மாறுகிறார். இந்துஜா நர்ஸாக வாழ்க்கையை தொடர்கிறார். இளம் வயதில் பிரிந்த இந்த ஜோடி ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது.

ராஜ்கிருஷ் கெட்டவனாக இருந்தாலும் காதலிக்க தயாராகிறார் இந்துஜா. ஆனால் தனக்கு அடைக்கலம் கொடுத்த தாதாவை விட்டு பிரிய மனமில்லாமல் துடிக்கிறார் ராஜ்கிருஷ். ஒரு சிக்கலிலும் மாட்டுகிறார். இந்த காதல் ஜோடியின் முடிவு என்ன என்பது மீதி கதை.

நாயகன் ராஜ்கிருஷ் பக்கத்து வீட்டு பையன் போன்று இருக்கிறார். காதலியா? அடைக்கலம் கொடுத்த தாதாவா என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போது வெளிப்படுத்தும் நடிப்பு நன்றாக இருக்கிறது. சண்டை காட்சிகளில் காட்டும் வேகமும், அண்ணாச்சியிடம் காட்டும் விசுவாசமும் காதலியுடன் வாழ ஆசைப்படும் தவிப்பும் சிறந்த நடிப்பு திறமை உள்ளவராகவும் அவரை அடையாளப்படுத்துகிறது.

காதல் பார்வை விழுமளவுக்கு இந்துஜா அழகாக இருக்கிறார். இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். அண்ணாச்சியாக வரும் சத்யா முருகன் படத்தை தாங்கி பிடிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் தாதாவுக்குரிய உடல்வாகுடன் இருக்கிறார். துரோகம் செய்த மகனை தண்டிப்பது பதற வைக்கிறது. அவரது உதவியாளராக வரும் மீசை பெரியவர் கதாபாத்திரமும் கவனிக்க வைக்கிறது. படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர். அனைவரும் அனுபவசாலிகள் இல்லையென்றாலும் தன்னம்பிக்கையோடு நடித்து இருக்கிறார்கள்.

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஹித்தேஷ் முருகவேல் இசையில் 'லைப் ஒரு லெசனு' பாடல் தாளம் போட வைக்கிறது. லெனின் சந்திரசேகரன் கேமரா காட்சிகளை அழகுபடுத்தி காட்டி இருக்கிறது. தாதா கதையை அடிதடி, காதல், உறவுகள் என்று உணர்வுப்பூர்வமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கி உள்ளார் இயக்குனர் கு.கி.பத்மநாபன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com