மகுடம் சூடியதா 'தலைவி' - விமர்சனம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
மகுடம் சூடியதா 'தலைவி' - விமர்சனம்
Published on

சட்டசபை கலாட்டாவில் ஆரம்பித்து, அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பது வரை, பல்வேறு காலகட்டங்களில் அவருடைய வாழ்க்கையில் நடந்த சாதனைகளையும், சோதனைகளையும் கவித்துவமான கதையாக்கி இருக்கிறார், டைரக்டர் விஜய்.

ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்து இருக்கிறார். பல காட்சிகளில் அவர் அழகாக தெரிகிறார். சில காட்சிகளில் ஒப்பனையே இல்லாமல், சுமார் முகம் காட்டுகிறார். நடிப்பில், உச்சம் தொட்டு இருக்கிறார். படப்பிடிப்பு அரங்குக்குள் எம்.ஜி.ஆரை பார்த்தும் பார்க்காதது போல் கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது; இறந்து போன மனைவி சதானந்தவதி போல் அலங்கரித்துக்கொண்டு எம்.ஜி.ஆர். முன்னால் போய் நிற்பது; பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கெட்டுப்போன சாப்பாட்டை பார்த்து கண்கலங்குவது; சட்டசபை கலாட்டாவுக்குப்பின், இதே சட்டசபைக்குள் முதல்-அமைச்சராகத்தான் நுழைவேன் என்று சபதம் செய்வது ஆகிய காட்சிகளில் கங்கனா கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

அரவிந்தசாமியை எம்.ஜி.ஆராக மாற்ற ஒப்பனையாளர் மிகுந்த சிரமப்பட்டிருப்பது, திரையில் தெரிகிறது. அதற்காக அரவிந்தசாமியும் நிறையவே முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, வி.என்.ஜானகியாக மதுபாலா, சரோஜாதேவியாக ரெஜினா கசன்ட்ரா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்களை விட, பின்னணி இசை ஹாலிவுட் தரத்தில் உள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவங்களை காட்சிப்படுத்துவதையும், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நேர்மையாக சித்தரிப்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார், டைரக்டர் விஜய். சிவாஜிகணேசன் கதாபாத்திரத்துக்கு வேறு நடிகர் கிடைக்கவில்லையா என்ன?

பொதுவாக வாழ்க்கை வரலாறு படங்களில் திரைக்கதை வேகக்குறைவாக இருக்கும். அந்த குறை இல்லாமல், விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் விஜய்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com