

சென்னை,
ஆதர்ஷ் மதிகாந்த், தன் மனைவி மற்றும் தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார். கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஆதர்ஷ் மதிகாந்துக்கு, கோவையில் வசிக்கும் தனது தாத்தா பற்றி தெரிய வருகிறது. அவர் சொத்துக்களை தனக்கு எழுதி வைக்க தயாராக இருப்பதும் தெரிகிறது.
சொத்து கிடைத்தால் தனது கடன் பிரச்சனைக்கு முடிவு கட்டிவிடலாம் என்று தனது மனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு கிராமத்துக்கு செல்கிறார் ஆதர்ஷ் மதிகாந்த். சொத்துக்காக படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தாவுடன் சில நாட்கள் தங்கவும் முடிவு செய்கிறார்.
அப்போது அந்த வீட்டில் எதிர்பார்க்காத சில பயங்கரமான சம்பவங்கள் நடக்கிறது. தன்னை அந்த ஊருக்கு அழைத்து வந்த நபரும், படுத்த படுக்கையாக இருந்த தனது தாத்தாவும் பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டனர் என்ற உண்மை தெரிய வருகிறது. அதிர்ச்சியில் உறையும் ஆதர்ஷ் மதிகாந்த் அந்த ஊருக்கு வர வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? இந்த பயங்கரத்தில் இருந்து அவர் மீண்டாரா? இதன் பின்னணி என்ன? என்பதை திகிலூட்டும் மீதி கதை.
திகில் கதைகளில் நடித்து பழக்கப்பட்ட ஆதர்ஷ் மதிகாந்த் இந்த முறையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். திகிலில் உறைவது, தன் உடலில் ஏதோ மாற்றம் நடப்பதை அறிந்து புலம்புவது, அதில் இருந்து மீண்டு வர துடிப்பது என கதாபாத்திரத்திற்கு வெகுவாக நியாயம் சேர்த்து நடித்துள்ளார்.
ஜோவிதா லிவிங்ஸ்டன் குடும்பபாங்கான கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார். பயமும், பதற்றமும் கலந்த நடிப்பால் அசத்துகிறார். சிறிது நேரமே வந்தாலும் கலங்கடிக்கும் நடிப்பால் சோனியா அகர்வால், அருவி மதன் அசத்தியுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் வரும் பாக்யராஜ் நடிக்கும் கலக்கல். அமுதவாணன், ரபிக் பாட்ஷா உள்ளிட்டோரும் நல்ல தேர்வு.
சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவும் விக்னேஷ் ராஜாவின் இசையும் திகிலூட்டுகிறது. புல்லரிக்க வைக்கும் திகில் காட்சிகள் பலம். சில காட்சிகள் யூகிக்க முடிகிறது.
ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதை திகில் கொண்ட காட்சிகளாக நகர்த்தி அச்சத்தில் உறைய வைத்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.கிஷான்.
இடைவேளையும் கிளைமாக்ஸ் காட்சியும் திருப்பம்.