கவினுக்கு வெற்றி கிடைத்ததா? - ''கிஸ்'' சினிமா விமர்சனம்


Did Kavin get success? - Kiss Cinema Review
x

வழக்கமான காதல் கதை என்றாலும், புதுமையான விஷயங்களை புகுத்தி இயக்குனராக தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் சதீஷ்.

சென்னை,

காதலை வெறுக்கும் ஒருவனது வாழ்வில் காதல் படுத்தும் பாடு தான் கதை.

காதல் என்றாலே சுத்தமாக பிடிக்காமல் இருக்கும் கவினுக்கு ஒரு மந்திர புத்தகம் கிடைக்கிறது. அதன்படி காதலர்கள் யாராவது முத்தமிட்டு கொள்வதை பார்த்தால் அவர்களது எதிர்காலம் கவினுக்கு தெரிந்துவிடும்.

இதனை பயன்படுத்தி உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்களை பிரித்துவிட்டு ஆனந்தம் கண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் இந்த புத்தகம் தனக்கு கிடைக்க காரணமாக இருந்த பிரீத்தி அஸ்ரானி மீது கவினுக்கு காதல் மலர்கிறது.

காதலை சொல்லப் போகும் நேரத்தில் பிரீத்தி அஸ்ரானி கவினுக்கு முத்தம் கொடுக்கிறார். அப்போது பிரீத்தி அஸ்ரானி உயிரிழக்க போவது கவினுக்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? கவின் தனது காதலை சொன்னாரா? அந்த மந்திர புத்தகத்தின் பின்னணி என்ன? என்பதை கலகலப்பான மீதி கதை.

கவின் தனது நடிப்பில் குறை வைக்கவில்லை. ஜாலியான கதாபாத்திரம் என்பதால் தனது வழக்கமான கலாட்டா நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எதார்த்த அழகாலும், எல்லை மீறாத நடிப்பாலும் பிரீத்தி அஸ்ரானி கவர்கிறார். தேவயானி, ராவ் ரமேஷ் ஆகியோரின் அனுபவ நடிப்பும், வி.டி.வி.கணேஷ், ஆர்.ஜே.விஜய் கூட்டணியின் காமெடியும் ரசிக்க வைக்கிறது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும், ஜென் மார்டினின் இசையும் படத்துடன் ஒன்ற செய்கின்றன. பின்னணி இசையும் கலக்கல்.

புதுமையான கதைக்களம் பலம். முதல் பாதியில் கோட்டை விட்டாலும் இரண்டாம் பாதையில் சுவாரசியமாய் காட்சிகள் நகர்கிறது. உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் உயிரோட்டம் குறைவு. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். 'லாஜிக்'கும் இடிக்கிறது.

வழக்கமான காதல் கதை என்றாலும், புதுமையான விஷயங்களை புகுத்தி இயக்குனராக தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் நடன கலைஞர் சதீஷ்.


1 More update

Next Story