நாகேசின் பேரன் நடித்த ''உருட்டு... உருட்டு...''- சினிமா விமர்சனம்

சமூக பிரச்சினைகளை சொல்லும் தளம் என்றாலும், அதில் காதல் - காமெடியை சரிவிகிதத்தில் இணைத்து கமர்ஷியல் படமாக கதையை நகர்த்தி இருக்கிறார், இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.
சென்னை,
நாகேசின் பேரன் கஜேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம்.
குடித்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் கஜேசை, உருகி உருகி காதலிக்கிறார் ரித்விகா ஸ்ரேயா. ஆனால் கஜேஷ், மதுவில் மட்டுமே நாட்டமுடன் இருக்கிறார்.
காதலனை வளைத்து போட, ரித்விகா ஸ்ரேயா எப்படி மகுடி ஊதி பார்த்தும் முடியவில்லை. மதுவின் மீது மட்டுமே வெறியாக இருக்கிறார்.
கஜேசை திருத்த எத்தனையோ விஷயங்களை செய்து, தோல்வியை சந்திக்கும் ரித்விகா ஸ்ரேயா யாரும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை அரங்கேற்றுகிறார். அனைவரையுமே அதிர்ச்சியில் உறைய வைக்கிறார்.
அது என்ன? ரித்விகா ஸ்ரேயா என்ன செய்தார்? கஜேஷ் திருந்தினாரா? என்பதே மீதி கதை.
கதைக்கு ஏற்ற நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார், கஜேஷ். அழகான காதலி அருகேயிருந்தும் அவரை கண்டுகொள்ளாமல் மதுவே கதி என இருக்கும் அவரது கதாபாத்திரம், 'அக்மார்க்' குடிகாரரை பிரதிபலிக்கிறது. இயல்பான நடிப்பை பாராட்டலாம்.
அறிமுக நடிகை என்றாலும், ரித்விகா ஸ்ரேயாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. முதல் பாதியில் ஆட்டம், பாட்டம் என்று வழக்கமான காதல் நாயகியாக வருபவர், இரண்டாம் பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் அதிர்ச்சியை தருகிறது. கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரன் கலகலப்புக்கு கியாரண்டி தருகிறார். அவரது மனைவிகளாக வரும் அஸ்மிதா, ஹேமா, சுகி ஆகியோரும் குறைவின்றி 'கவனிக்க' வைக்கிறார்கள்.
பத்மராஜூ, ஜெய்சங்கர், சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் உள்ளிட்டோரும் அலட்டாத நடிப்பில் அசத்துகிறார்கள்.
யுவராஜ் பால்ராஜின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக தந்திருக்கிறது. அருணகிரியின் இசையும், கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசையும் ஓகே ரகம்.
சமூக பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருக்கும் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதை பாராட்டலாம். ஆனால் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். காட்சிகளில் நாடகத்தனம் எட்டிப்பார்க்கிறது.
சமூக பிரச்சினைகளை சொல்லும் தளம் என்றாலும், அதில் காதல் - காமெடியை சரிவிகிதத்தில் இணைத்து கமர்ஷியல் படமாக கதையை நகர்த்தி இருக்கிறார், இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.
உருட்டு... உருட்டு... - ஓவர் உருட்டு.






