"திரிஷ்யம் 3" சினிமா விமர்சனம்

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான "திரிஷ்யம் 3" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"திரிஷ்யம் 3" சினிமா விமர்சனம்
Published on

சென்னை,

மோகன்லால் மனைவியான மீனா, தன்னிடமும் தனது மகளிடமும் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கும் பெண் போலீஸ் அதிகாரி மகனை கொல்கிறார். அந்த சடலத்தை மறைத்து, போலீஸ் விசாரணையில் சாதுரியமாக நாடகமாடி குடும்பத்தை காப்பாற்றுகிறார் மோகன்லால். இறந்த வாலிபரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்படும் போதும் மோகன்லால் வழக்கை திசை மாற்றி தப்பிக்கிறார். இது இரண்டு பாகங்களிலும் காட்டப்பட்ட கதை.

போலீசாரிடம் இருந்து எந்த சிக்கலும் இல்லாத சூழலில் சினிமா தயாரிப்பாளராக மாறும் மோகன்லால், தனது மூத்த மகளுக்கு வரன் தேடுகிறார். ஆனாலும் வரன்கள் எல்லாம் கைகூடி வரும் நேரத்தில் தட்டிப்போக, இதன் பின்னணியில் 2 மர்ம நபர்கள் இருப்பதை அறிந்து கொள்கிறார்.

அந்த 2 பேரும் தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறியும் மோகன்லால், இந்த 2 பேரையும் இன்னொரு நபர் மூளையாக இருந்து இயக்கி வருவது தெரிந்து அதிர்ந்து போகிறார். இதையடுத்து மோகன்லால் குடும்பம் மீண்டும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. மோகன்லால் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? நினைத்தபடி தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்தாரா? திருமணத்தை நடத்த விடாமல் தடுக்கும் அந்த மர்ம நபர்கள் யார்? என்பதே 'திரிஷ்யம்-3' படத்தின் கதை.

பக்குவமான நடிப்பால் மோகன்லால் அசத்துகிறார். எந்த திசையில் இருந்து பிரச்சினை வருமோ... என்ற பதற்றத்திலேயே சுற்றும் மோகன்லால், 'எமோஷனல்' காட்சிகளிலும் அனுபவ நடிப்பை கொட்டியுள்ளார். எதார்த்த நடிப்பால் மீனா அலங்கரிக்கிறார். மகள்களாக வரும் அன்சிபா ஹாசனும், எஸ்தர் அனிலும் தங்கள் பங்குக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கலாபவன் சாஜன், வீணா நந்தகுமார், தினேஷ் பிரபாகர், பிஜூமேனன், முரளிகோபி உள்ளிட்டோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

ஆஷா சரத் இந்த பாகத்தில் கடமைக்கு என வந்துபோகிறார். சித்திக் கதாபாத்திரம் திருப்பம். சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவில் காட்சிகளில் இயல்புத்தன்மை ஒட்டியிருக்கிறது. அனில் ஜான்சனின் இசை எடுபடவில்லை.

முதல் 2 பாகங்களில் திரைக்கதையில் இருந்த சுவாரசியம் இதில் 'மிஸ்ஸிங்'. முதல் பாதி பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது. பல இடங்களில் இதுதான் நடக்கும் என்று யூகிக்கவும் முடிகிறது. இரண்டாம் பாதியில், குறிப்பாக கடைசி 15 நிமிடங்கள் 'கிளைமேக்ஸ்' ஆறுதல் தருகிறது.

முந்தைய பாகங்களை விட விறுவிறுப்பும், பரபரப்பும் குறைவு என்றாலும், புதிய தளத்தில் போரடிக்காமல் கதை சொல்லி கொஞ்சம் சமாளித்துள்ளார், இயக்குனர் ஜீத்து ஜோசப். 4-ம் பாகத்துக்கான 'லீடு' கொடுத்தது அதிர்ச்சி தான். திரிஷ்யம் 3 - இந்த பாகத்துடன் சுபம் போடுவது நலம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com