"துரந்தர் தி ரிவெஞ்ச்" - எப்படி இருக்கிறது? விமர்சனம்

ஆதித்யா தார் இயக்கிய துரந்தர் தி ரிவெஞ்ச் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"துரந்தர் தி ரிவெஞ்ச்" - எப்படி இருக்கிறது? விமர்சனம்
Published on

இந்தியாவில் இருந்து ரகசிய உளவாளியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் ரன்வீர் சிங், அங்குள்ள பயங்கரவாதிகள் கூடாரத்தின் முக்கிய தலைவரான அக்‌ஷய் கண்ணாவை கொல்வதுடன் 'துரந்தர்' முதல் பாகம் நிறைவடைந்தது. அதில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. அக்‌ஷய் கண்ணாவின் மறைவுக்கு பிறகு அவரது வலதுகரமான டானிஷ் பாண்டரை தலைவராக்கும் ரன்வீர் சிங், ஒருகட்டத்தில் அவரை போலி 'பாஸ்போர்ட்' வழக்கில் வெளிநாட்டு போலீசாரிடம் சிக்க வைத்து, தானே தலைவராகிறார்.

இதற்கிடையில் இந்தியாவில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடவும், முக்கிய நகரங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் கூடி திட்டம் போடுகிறார்கள். இதுபற்றி இந்திய உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கும் ரன்வீர் சிங், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடும் 'ஆபரேசன் துரந்தர்'-ஐ கையில் எடுக்கிறார். இதற்கிடையில் ரன்வீர் சிங், இந்தியாவின் ரகசிய 'ஏஜெண்ட்' என்ற உண்மை பயங்கரவாதிகளுக்கு தெரியவருகிறது. இறுதியில் என்ன ஆனது? ரன்வீர் சிங்கின் கதி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

முதல் பாகத்தை காட்டிலும் நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார், ரன்வீர் சிங். நடிப்பிற்கு நல்ல தீனி. ஆக்‌ஷன் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் கைதட்டல்களை அள்ளுகிறார். மாதவன் நடிப்பு மிரட்டல். தன்னை எதிர்த்து சவால் விட்ட பயங்கரவாதியின் சாவில், இந்தியாவை வாழ்த்தி பேச சொல்லி உயிரை விட செய்வது அதகளம். அர்ஜூன் ராம்பால், சஞ்சய் தத், ராகேஷ் பேடி, சாரா அர்ஜூன் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

சாஷ்வத் சச்தேவின் இசையும், விகாஷ் நவ்லகா ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கிறது. ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆங்காங்கே பதில் அளிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இடைவேளையும், கிளைமேக்ஸ் காட்சியும் ரசிகர்களுக்கு புல்லரிப்பு.

நீளமான கதை என்றாலும், பொறுமையுடன் ரசித்து பார்க்க வைக்கும் வகையில் அதிரடி - ஆக்‌ஷன் விருந்தை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தந்துள்ளார், இயக்குனர் ஆதித்யா தார். தேச பக்திக்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளுக்கு சல்யூட்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com