எறும்பு: சினிமா விமர்சனம்

எறும்பு: சினிமா விமர்சனம்
Published on

கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்யும் சார்லிக்கு மறைந்த முதல் மனைவி மூலம் மகள் மோனிகா, மகன் மாஸ்டர் சக்தி ரித்விக் உள்ளனர்.

குடும்ப செலவுக்கு எம்.எஸ்.பாஸ்கரிடம் கடன் வாங்கிய சார்லி திருப்பி கொடுக்க முடியாமல் திணறுகிறார். கடனை அடைக்க தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கொண்டு வெளியூர் போய் கூலி வேலை பார்க்கிறார்.

அப்போது வீட்டில் இருந்த ஒரு தங்க மோதிரத்தை எடுத்து சக்தி ரித்விக் விரலில் மாட்டிக் கொண்டு திரிய அது தொலைந்து போகிறது. சித்திக்கு பயப்படும் மோனிகாவும், சக்தி ரித்விக்கும் என்ன முடிவு எடுக்கிறார்கள். கடனை சார்லியால் குறிப்பிட்ட தேதியில் திருப்பி கொடுக்க முடிந்ததா? என்பதற்கு விடையாக மீதி கதை.

கதையின் நாயகனாக வரும் சார்லி அபாரமான நடிப்பின் மூலம் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் குழந்தைகளுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொடுப்பது, கந்து வட்டிக்காரரிடம் அவமானப்படுவது, கடனை அடைக்க ஒவ்வொருவராய் தேடிப்போய் பண உதவி கேட்டு கெஞ்சுவது என்று ஏழை குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.

இரக்கம் இல்லாத கந்து வட்டி கொடுமைக்காரர் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஸ்கோர் செய்கிறார். அவரது பேச்சும், உடல்மொழியும் நிஜமான கந்து வட்டிக்காரரை கண்முன் நிறுத்துகிறது.

ஜார்ஜ் மரியான் சிரிக்க வைக்கிறார். சூசன் ஜார்ஜ் மற்றும் கதையின் முதுகெலும்பு கதாபாத்திரங்களாக வரும் சிறுமி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக் ஆகியோர் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர்.

ஆரம்ப காட்சிகள் நாடகத்தனமாய் நகர்கின்றன. பிற்பகுதி கதையில் இருக்கும் ஜீவன் ஒன்ற வைக்கிறது.

காளிதாஸ் கேமரா கிராமத்தை அழகாக படம் பிடித்து உள்ளது. அருண் ராஜ் பின்னணி இசை பலம்.

பட்ட கடனை திருப்பி கொடுக்க அல்லாடும் ஒரு ஏழை குடும்பத்தின் வாழ்வியலையும், மோதிரத்தை தொலைத்த இரு குழந்தைகளின் தவிப்புகளையும் உணர்வுப்பூர்வமாக படமாக்கி உள்ளார் டைரக்டர் சுரேஷ் ஜி. கிளைமாக்ஸ் கைதட்ட வைக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com