இயக்குநரில் இருந்து ஹீரோவாக... லோகேஷ் கனகராஜின் 'டிசி'- சினிமா விமர்சனம்

எமோஷனல், காதல் என அனைத்து விஷயங்களையும் புகுத்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

இயக்குநரில் இருந்து ஹீரோவாக... லோகேஷ் கனகராஜின் 'டிசி'- சினிமா விமர்சனம்
Published on

சென்னை,

தலைவாசல் விஜய் தலைமையிலான கூலிப்படையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரை தாக்கி ஆயுதங்களையும் கடத்துகிறார்கள். ஒரு குடும்பத்தை சீரழித்த போலீஸ் அதிகாரியை கொடூரமாக கொலை செய்கிறார்கள்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது கும்பலை தீர்த்துக்கட்ட போலீசார் முடிவு செய்கிறார்கள். போலீசாரின் தாக்குதலுக்கு பயந்து லோகேஷ் கனகராஜ் அவரது நண்பர்களும் ஒரு ஓட்டலில் பதுங்குகிறார்கள். அந்த ஓட்டலுக்கு வரும் போலீசார் லோகேஷ் கனகராஜை பிடிப்பதுடன் அவருடன் நட்பு பாராட்டிய பாடகி சஞ்சனாவை தீர்த்து கட்டுகிறார்கள்.

இதற்கிடையில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத ஒரு சந்திப்பில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் வாமிகா கபியை சந்திக்கிறார். தனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து வரும் வாமிகா கபி ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் பயணிக்கிறார். உயிருக்கு பயந்து புதிய வாழ்க்கையை தேடி ஓடும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி சந்திக்கும் போராட்டங்கள் என்ன என்பதை மீதிக்கதை.

இதுவரை இயக்குனராக கலக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த முறை நடிகராக புதிய பரிமாணத்தில் அசத்துகிறார். அவரது உடல் மொழியும், அதிரடி ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கின்றன. வாமிகா கபியின் நடிப்பும், அவரது பேச்சும் ரசிக்க வைக்கிறது. ஒரு சில காட்சிகளே வந்தாலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நினைவில் நிற்கிறார். தலைவாசல் விஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார்கள். போஜராஜன் கதாபாத்திரத்தில் வரும் போலீஸ் அதிகாரி நடிப்பில் மிரட்டுகிறார்.

முகேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல். அனிருத் இசை ஆட்டம் போட வைக்கிறது. பாடல்கள் மீண்டும் கேட்கும் ரகம். அதிரடியான காட்சிகள் படத்துக்கு பலம். ஆனாலும் இவ்வளவு வன்முறை தேவையா என்ற கேள்வியும் இருக்கிறது.

ஒரு சாதாரண கேங்ஸ்டர் கதை என்றாலும் அதில் தேவையான எமோஷனல், காதல் என அனைத்து விஷயங்களையும் புகுத்தி கவனம் ஈர்த்துள்ளார் அருண் மாதேஸ்வரன். இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸும் பரபரப்பின் உச்சம். லோகேஷ் கனகராஜுக்கு இது ஒரு புதிய திருப்பம்.

தேவதாஸ் சந்திரா என்பதன் சுருக்கமே டிசி

X

Daily Thanthi
www.dailythanthi.com