சூதாட்டம் முதல் பழிவாங்கல் வரை... ‘ஐ அம் கேம்’ திரை விமர்சனம்

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐ அம் கேம்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சூதாட்டம் முதல் பழிவாங்கல் வரை... ‘ஐ அம் கேம்’ திரை விமர்சனம்
Published on

சென்னை,

பணக்கார வீட்டு பிள்ளையான துல்கர் சல்மான் எப்போதுமே குடி, சூதாட்டம் என பொழுதை கழிக்கிறார். சூதாட்டத்தில் பணம் அனைத்தையும் இழந்து கடன்காரராகி விடுகிறார். சூதாட்ட விடுதியில் ஏற்படும் பிரச்சினையில் சிக்கும் துல்கர் சல்மான், அங்கிருந்து தப்பிக்கும்போது ஒரு விபத்தில் சிக்கி வலது கையை இழக்கிறார்.

இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் இன்னொருவரின் கை பொருத்தப்படுகிறது. அந்த கை அவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. எந்த சூதாட்டத்தில் தோல்வி அடைந்தாரோ, அதே சூதாட்டத்தில் வெற்றி மீது வெற்றிகளை குவித்து பணத்தை அள்ளுகிறார்.

அதேவேளை தனது வலது கை தனது கட்டுப்பாட்டை மீறி சில விஷயங்களை செய்வதை துல்கர் சல்மான் உணருகிறார். கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார். அப்போது தொழில் அதிபரான மிஷ்கினை கொல்ல தனது கை துடிப்பதை உணரும் துல்கர் சல்மானுக்கு, உண்மை என்னவென்று தெரியவர அதிர்ச்சியில் உறைகிறார்.

துல்கர் சல்மானுக்கு பொருத்தப்பட்ட அந்த கை யாருடையது? அது ஏன் மிஷ்கினை கொல்ல துடிக்கிறது? இதன் பின்னணி என்ன? என்பதே விறு விறுப்பான மீதி கதை.

சவாலான காட்சிகளில் சாமர்த்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், துல்கர் சல்மான். இடைவேளை காட்சிகளில் பிரமிப்பு ஏற்படுத்துகிறார். அழகாலும், அளவான நடிப்பாலும் மிளிர்கிறார், கயாடு லோகர். வில்லனாக நடித்துள்ள மிஷ்கினின் ஆக்ரோஷமும், உடல் மொழியும் கவனிக்க வைக்கிறது.

ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் போர்ட், ஜெயசுதா, யோகிபாபு ஆகியோரும் பொருத்தமான தேர்வு. ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்களும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. புதுமையான காட்சிகள் படத்துக்கு பலம்.

திரைக்கதையில் இன்னும் நேர்த்தி வேண்டும். நீளமான, தேவையற்ற காட்சிகளுக்கு 'கத்தரி' போட்டிருக்கலாம். முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் இல்லை.

வழக்கமான பழிவாங்கல் படலமாக மாறிவிட்டது. சிறு சிறு குறைகள் இருந்தாலும் காதல், சஸ்பென்ஸ், ஆக்ஷன், திரில்லர் என எல்லா அம்சங்களும் கொண்ட கமர்ஷியல் படமாக இயக்கி கவனம் ஈர்த்துள்ளார். நஹாஸ் ஹிதாயத்.

'ஐ அம் கேம்' ஒருமுறை விளையாடலாம்

X

Daily Thanthi
www.dailythanthi.com