காந்தி கண்ணாடி: சினிமா விமர்சனம்

ஷெரீப் இயக்கத்தில் சின்னத்திரை நடிகர் பாலா, நமிதா நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
காந்தி கண்ணாடி: சினிமா விமர்சனம்
Published on

தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரியும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் 60-ம் திருமணம் செய்துகொள்ள அர்ச்சனா ஆசைப்படுகிறார். அதை நடத்தி வைக்க தங்களுக்கு பிள்ளைகள் இல்லையே என வருத்தமும் கொள்கிறார். மனைவியின் ஆசையை பூர்த்தி செய்தே தீருவது என்ற இலக்கில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பாலாவை சந்திக்கிறார் பாலாஜி சக்திவேல். இதன்மூலம் கல்லா கட்ட நினைக்கும் பாலா, தொகையை ஜாஸ்தியாக சொல்ல, சொந்த ஊரில் இருக்கும் நிலத்தை விற்று பணத்தை திரட்டுகிறார் பாலாஜி சக்திவேல். இதற்கிடையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வர, பாலாஜி சக்திவேலிடம் இருக்கும் பணம் அனைத்தும் செல்லாமல் போய்விடுகிறது. மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய துடிக்கும் பாலாஜி சக்திவேலின் ஆசை நிறைவேறியதா? பாலாவின் பணத்தாசை என்ன ஆனது? அர்ச்சனாவின் ஏக்கம் தீர்ந்ததா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை. 

பாலா, முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மனம் மாறி அவர் திருந்தும் காட்சிகளில் எதார்த்த நடிப்பை அள்ளி கொட்டியிருக்கிறார். கதாநாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி, அழகாலும், நடிப்பாலும் கவர்கிறார்.

பாலாஜி சக்திவேலும், அர்ச்சனாவும் போட்டிபோட்டு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக 'அதான் நீ இருக்கேல...' என்று பாலாஜி சக்திவேல் ஒவ்வொரு முறையும் அர்ச்சனாவிடம் சொல்வது அழகு. ஜீவா சுப்ரமணியம், ஆராத்யா, ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறைவில்லை.

பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகளும், விவேக்-மெர்வின் இசையில் பாடல்களும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. படத்தின் இறுதியில் ஒலிக்கும் யுவன் சங்கர் ராஜாவின் குரல் உள்ளத்தை வருடுகிறது. எதார்த்த காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளை முன்கூட்டியே யூகிக்க முடிவது பலவீனம். திரைக்கதையில் இன்னும் கவனம் தேவை.

வயதான தம்பதியின் காதல் வாழ்க்கையை, அழகாக சொல்லி இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் பாடம் எடுத்திருக்கிறார், இயக்குனர் ஷெரீப். கிளைமேக்ஸ் காட்சி மனதை கனமாக்குகிறது.

காந்தி கண்ணாடி - உடையவில்லை. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com