குட்நைட் : சினிமா விமர்சனம்

`குறட்டைதானே!' என நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயம் ஓர் இளைஞரின் வாழ்க்கையில் எந்த அளவு பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதை காமெடி டிராமாவாகச் சொல்லும் படம்தான் `குட் நைட்'.
குட்நைட் : சினிமா விமர்சனம்
Published on

நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன், அம்மா, அக்காள், அக்காள் கணவர், தங்கையுடன் வசிக்கிறார். ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவருக்கு தூங்கும்போது சத்தமாக குறட்டை விடும் பிரச்சினை இருக்கிறது.

மணிகண்டனை காதலிக்கும் பெண் குறட்டைப்பழக்கம் இருப்பது தெரிந்ததும் காதலை முறித்துவிட்டு பிரிகிறார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருக்கும் மணிகண்டனுக்கு பெற்றோர் இல்லாத மீதா ரகுநாத் அறிமுகமாகிறார். மீதாவுக்கு சத்தம் இல்லாத அமைதி நிலையே பிடிக்கிறது. இருவரும் நட்பாக பழகி பிறகு காதலிக்கின்றனர்.

குறட்டைப்பழக்கம் இருப்பதை சொல்லாமலேயே அவரை திருமணமும் செய்துகொள்கிறார் மணிகண்டன். முதல் இரவில் மணிகண்டன் குறட்டையைக் கேட்டு அதிரும் மீதா ரகுநாத் ஒவ்வொரு நாள் இரவிலும் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கிறது.

இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரியும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறட்டைப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததா? இருவரும் சேர்ந்தார்களா? என்பது மீதிக்கதை..

குறட்டைப்பிரச்சினையால் அவதிப்படும் கதாபாத்திரத்தில் மணிகண்டன் வாழ்ந்து இருக்கிறார். அவமானங்களை எதிர்கொள்வது, மனைவி படும் கஷ்டங்களைப் பார்த்து மனதுக்குள்ளேயே புழுங்கித் தவிப்பது, சகோதரியிடம் அழுது புலம்புவது என்று படம் முழுக்க உணர்வுப்பூர்வமான நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகி மீதா நகுநாத் அளவாக பேசி அப்பாவித்தனமும் வெகுளியும் நிறைந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கணவன் குறட்டையால் ஏற்படும் சிரமங்களை சொல்லாமல் மறைப்பது, அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு கணவனை பிரிய முடிவு எடுப்பது என்று காட்சிக்குக் காட்சி ஜீவனுள்ள நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தாத்தா, பாட்டியாக வரும் பாலாஜி சக்திவேல், கவுசல்யா நடராஜன் கதாபாத்திரங்கள் பலம். மாமாவாக வரும் ரமேஷ் திலக் சிரிக்க வைக்கிறார். அக்காவாக வரும் ரேச்சலுக்கு குடும்பத்தை வழிநடத்தும் கனமான கதாபாத்திரம்.

பிற்பகுதி கதையின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

ஜெயந்த் சேது மாதவன் கேமரா காட்சிகளை அழகாக செதுக்கி உள்ளார். சான் ரோல்டன் பின்னணி இசை பலம்.

குறட்டையை சுற்றி நடக்கும் வாழ்வியல் பிரச்சினைகளை அழுத்தமாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி தேர்ந்த இயக்குனராக கவனம் பெறுகிறார் விநாயக் சந்திரசேகரன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com