பிரமாண்ட காட்சிகள்... பரபரப்பான திருப்பங்கள்! மூக்குத்தி அம்மன்-2 பட விமர்சனம்

பிரமாண்ட காட்சிகள்... பரபரப்பான திருப்பங்கள்! மூக்குத்தி அம்மன்-2 பட விமர்சனம்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
Published on: 
Cinema Review(4 / 5)

சென்னை,

பெண் போலீசாக இருக்கும் நயன்தாராவுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது அந்தக் கனவில் சில அரக்கர்கள் வந்து மயிலாஞ்சி என்ற ஊருக்கு வா என்று நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இதனால் நயன்தாரா ஒரு விதமான குழப்பத்திலேயே இருந்து வருகிறார்.

இதற்கிடையில் மயிலாஞ்சியில் 2,000 ஆண்டுகளாக ஜீவசமாதி அடைந்திருக்கும் ரெஜினாவை தீயவர்கள் கூடாரம் தங்களது மந்திர சக்தி மூலம் மீண்டும் உயிர்பிக்கிறார்கள். அதே வேலை அந்த ஊருக்கு விருப்ப பணி மாறுதல் கேட்டு தனது தாய் ஊர்வசியுடன் பெறுகிறார் நயன்தாரா. நயன்தாரா அந்த ஊருக்கு வந்ததை அறிந்த ரெஜினா, நயன்தாராவை பழிதீர்க்க துடிக்கிறார். அவரை பலி கொடுக்கவும் விரும்புகிறார்.

இதற்கிடையில் தீயவர்கள் கூடாரம் நயன்தாராவை நெருங்கும்போது, நயன்தாராவிடம் சில அதிர்வுகள் ஏற்படுகிறது. நயன்தாரா யார் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வர அதிர்ச்சிகள் மேலோங்குகிறது. அதன் பிறகு 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாற்று சம்பவம் எடுத்துக்காட்டப்படுகிறது.

ஊர் மக்களை காப்பாற்றும் தெய்வமாக மூக்குத்தி அம்மனாக நயன்தாரா மறுபிறப்பு எடுத்துள்ளது தெரிய வருகிறது. தான் அம்மனின் அவதாரம் என்றே தெரியாத நயன்தாராவை கொலை செய்ய ரெஜினா துடிப்பது ஏன்? ரெஜினாவின் சதித்திட்டம் பலித்ததா? நயன்தாரா தப்பித்தாரா? என்பதே பரபரப்பான மீதி கதை.

போலீஸ்காரராக அப்பாவி தோற்றத்தில் வலம் வரும் நயன்தாரா, சூலம் ஏந்திய அம்மனாக மாறும் இடங்களில் சிலிர்க்க வைக்கிறார். அம்மன் வேடம் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

நயன்தாராவிற்கு அடுத்தபடியாக படம் முழுக்க கவனிக்க வைத்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா. கோப பார்வையும், தீப்பிழம்பு கண்களும் அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரெஜினா பொது அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிதும் பேசப்படுவார்.

ஊர்வசி, யோகி பாபு கூட்டணியில் ஆங்காங்கே வரும் காமெடிகள் ஓரளவு பரவாயில்லை. இனியா, துனியா விஜய், சிங்கம் புலி, சுனில் உள்ளிட்டோர் நடிப்பிலும் குறைவில்லை. சிறப்பு தோற்றத்தில் ஓரிரு காட்சிகளை வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள் குஷ்புவும், சினேகாவும்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், ஹிப் ஹாப் தமிழாவின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. மெய்சிலிர்க்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். இரண்டாம் பாதியில் கதையின் போக்கும் சற்று மாறிவிட்டது.

மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபடுத்தி, இரண்டாம் பாகத்தை பரபரப்பும் விறுவிறுப்பும் கூடிய காட்சிகளாக வடிவமைத்து மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

படத்தின் இடைவேளையும், கிளைமாக்ஸ் காட்சியும் கண்களுக்கு விருந்து.

X