ஜி.வி.பிரகாஷின் “ஹேப்பி ராஜ்” - சினிமா விமர்சனம்

மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
ஜி.வி.பிரகாஷின் “ஹேப்பி ராஜ்” - சினிமா விமர்சனம்
Published on

பல வருட காத்திருப்புக்கு பிறகு பிறந்த மகன் என்பதால், ஜி.வி.பிரகாஷ் மீது ஜார்ஜ் மரியன் - கீதா கைலாசம் தம்பி அளவுக்கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். தான் அழகாயில்லாமல் போனாலும், தன் மகன் அழகாக பிறந்திருக்கானே என்று ஆனந்தம் கொள்ளும் ஜார்ஜ் மரியன், மகனை பொத்தி பாதுகாத்து வளர்க்கிறார். பள்ளி ஆசிரியரான ஜார்ஜ் மரியனை, ஜி.வி.பிரகாஷை நல்லபடியாக படிக்கவும் வைக்கிறார். ஆனால் தனது தந்தையின் உருவத்தை அனைவருமே கேலி செய்து வருவதால், அவர் மீது இனம் புரியாத வெறுப்பு ஜி.வி.பிரகாஷுக்கு வந்துவிடுகிறது. இதனால் தந்தையை விட்டு விலகி இருக்க முடிவு செய்கிறார். பெங்களூரு சென்று வேலை பார்க்கிறார்.

இதற்கிடையில் அலுவலகத்தில் சக ஊழியரான ஸ்ரீகவுரி பிரியாவை காதலிக்கிறார். ஸ்ரீகவுரி பிரியாவின் தந்தையான அப்பாஸ், பெரும் பணக்காரர். ஆனாலும் மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். இருவீட்டாரும் பெங்களூருவில் ஒன்றுகூடி திருமண பேச்சை தொடங்கும் சூழலில், தேவையற்ற குழப்பங்கள் அரங்கேறுகிறது. இதில் ஜார்ஜ் மரியன் - அப்பாஸ் இடையே முட்டிக் கொள்கிறது. இதனால் திருமணம் தடைபடுகிறது. அதன்பிறகு என்ன நடந்தது? யாருடைய ஈகோ வென்றது? என்பதே கலகலப்பான மீதி கதை.

வழக்கம்போலவே கலகலப்பான வேடத்தில் கலக்கியுள்ளார், ஜி.வி.பிரகாஷ். காதல் காட்சிகளிலும் அசத்துகிறார். திருமணம் தடைபட்ட நிலையில் தந்தையா, மாமனாரா? என்ற சூழலில் சிக்கி தவிக்கும் இடங்கள் காமெடிக்கு கியாரண்டி. படத்தின் பெரும் பலமாக ஜார்ஜ் மரியனின் நடிப்பு அமைந்திருக்கிறது. தன்னை புறக்கணிக்கும் மகனின் எதிர்காலத்தை எண்ணி பாடுபடும் தந்தையாக மனதில் நிற்கிறார். அவரது நடிப்புக்கு இந்த படம் நல்ல தீனி என்றே சொல்லலாம்.

அழகாலும், நடிப்பாலும் கவருகிறார் ஸ்ரீகவுரி பிரியா. நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் அப்பாஸ் கவனம் ஈர்க்கிறார். நடிப்பு, நடனம் என்று பட்டையை கிளப்புகிறார். கீதா கைலாசம் நடிப்பும் கைக்கொடுத்து இருக்கிறது. இதர நடிகர்- நடிகைகளின் நடிப்பிலும் குறைவில்லை.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. கலகலப்பான காட்சிகள் பலம். முதல் பாதியில் இருந்த சின்ன சின்ன குறைபாடுகளும், இரண்டாம் பாதியில் வரும் அழுத்தமான திரைக்கதையில் மறக்கடிக்கப்படுகின்றன. பெற்றோரின் பாசம் குறித்த காட்சிகள் உருக வைக்கின்றன.

சமூகத்தில் யாரும் யாருக்கும் குறைந்தவன் இல்லை என்ற கருத்தை ஆழமாக சொல்லி, குடும்ப பொழுதுபோக்கு படமாக கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், மரியா ராஜா இளஞ்செழியன்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com