"அவதார் - பயர் அண்ட் ஆஷ்" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய "அவதார் - பயர் அண்ட் ஆஷ்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
‘அவதார்-2' முடிந்த இடத்தில் இருந்து படம் தொடங்குகிறது.
தன் மூத்த மகனை பறிகொடுத்த ஜேக் சல்லி, கடல் நாவிகளுடனேயே வசிக்கிறார். தன்னுடன் இருக்கும் மனித இனத்தைச் சேர்ந்த ஸ்பைடரை மீண்டும் வான்வெளி மையத்தில் விட்டுவிட துணிகிறார்.
அப்படி செல்லும்போது, ஒரு கொள்ளை கூட்டம் (சாம்பல் நிற நாவிகள்) ஜேக் சல்லியைத் தாக்குகிறார்கள். இதற்கிடையில் ஆக்சிஜன் தீர்ந்து மூச்சுவிட முடியாமல் திணறும் ஸ்பைடரை, ‘ஏவா'வின் (நாவிகளின் கடவுள்) உதவியால் மந்திர மரத்தின் வேர்கள் மூலம் சுவாசிக்க வைக்கிறார் கிரி.
ஜேக் சல்லியைப்பழிவாங்க துடிக்கும் கர்னல் மைல்ஸ், சாம்பல் ராணி வாரங்குடன் ஜேக் சல்லியின் கூடாரத்தையும் அழிக்கப் பார்க்கிறார். அவரை எதிர்த்து போர்புரியும் ஜேக் சல்லி வெற்றி கண்டரா, இல்லையா? என்பதே மீதி கதை.
நாவிகளாக சாம் வோர்திங்டன், ஜோ சல்டனா, சிகர்னி வேவர், ஸ்டீபன் லாங், ஓனா சாப்லின், கேட் வின்ஸ்லெட், மிசெல் இயோ, டேவிட் தியூலிஸ், ஏடி பால்கோ, பெய்லி பேஸ், பிரிட்டன் டால்டன் என அனைவருமே போட்டிபோட்டு நடித்து அசத்தியுள்ளனர். ஜியோவன்னி ரிபிசி, ஜேக் சாம்பின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
‘பாராசூட்' பாணியில் வானத்தில் பறக்கும் மீன்கள், சாம்பல் நிற நாவிகள், ராட்சத திமிங்மிலங்கள், கடலுக்குள் சீறி பாயும் பறவைகள், மந்திர மரம் என படம் முழுக்க 'கிராபிக்ஸ்' காட்சிகளால் விருந்து படைத்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் ரசூல் கார்பெண்டர். சிமன் பிராங்களின் இசை உயிரோட்டமாய் நகருகிறது.
படத்தின் பெரும் பலமாக சாம்பல் ராணியின் (ஓனா சாப்லின்) நடிப்பும், மைல்ஸ் (ஸ்டீபன் லாங்) நடிப்பும் இருக்கிறது. ஜேக் சல்லி - நெய்திரியின் கதாபாத்திரங்கள் வலுவாக வடிவமைக்கப்படவில்லை. படத்தின் முதல் பாதி, ‘ப்ளீஸ் சண்டை போடுங்களேன்பா...' என்று போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் யூகிக்க முடிகிறது.
முந்தைய பாகங்களில் இருந்த பிரமிப்பும், விறுவிறுப்பும் இந்த படத்தில் கொஞ்சம் ‘மிஸ்ஸிங்'. என்றாலும் 3¼ மணி நேரம் கதையில் இல்லாவிட்டாலும், கண்களுக்கு விருந்து படைத்து மிரட்டியுள்ளார், இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
அவதார்: பயர் அண்ட் ஆஷ் - இத்துடன் முடிப்பது நலம்.






