"நீளிரா" படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்

இந்திய ராணுவ அமைதிப்படை தலைவனாக நவீன் சந்திரா கம்பீரமான நடிப்பால் கலக்கியுள்ளார்.
"நீளிரா" படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்
Published on

சென்னை,

இலங்கையின் வடபகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ரூபா கொடுவாயூரின் வீட்டில் திருமணம் முடிவாகிறது. இதற்கிடையில் இலங்கையில் போராளிகளை அடக்கி ஒடுக்கும் இந்தியாவின் அமைதிப்படை நவீன் சந்திரா தலைமையில் அந்த கிராமத்துக்கு வருகிறது. வழிமாறி வரும் இந்த அமைதிப்படையினர் திருமண வீட்டை இரவு வேளையில் சூழ்கிறார்கள். அந்த வீட்டில் உள்ளவர்களை பிணையக் கைதிகளாக்கும் அமைதிப்படை, வீட்டையே ஒரு முகாமாக்கி விடுகிறார்கள்.

இந்த சூழலில் அமைதிப்படையினர் இருக்கும் தகவல்கள் கசிந்து, அந்த வீட்டை சுற்றி போராளிகள் கண்காணிக்கிறார்கள். அமைதிப்படையினரை தாக்கவும் நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள். விடிந்தால் திருமணம் என்ற சூழலில், ஒரு பக்கம் அமைதிப்படையினர், இன்னொரு பக்கம் போராளிகளிடம் சிக்கி குடும்பத்தினர் பரிதவிக்கிறார்கள். அந்த தமிழ் குடும்பத்தின் கதி என்ன? திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா? என்பதே மீதி கதை.

இந்திய ராணுவ அமைதிப்படை தலைவனாக நவீன் சந்திரா கம்பீரமான நடிப்பால் கலக்கியுள்ளார். ஒருபக்கம் அதிகாரம், இன்னொரு பக்கம் மனிதாபிமானம் என இருதலை கொள்ளி எறும்பாக பரிதவிக்கும் இடங்களில் கவனம் ஈர்க்கிறார். திருமண பெண்ணாக கலங்கி தவிக்கும் இடங்களில் ரூபா கொடுவாயூர் அசத்துகிறார். போரின் வலி சுமக்கும் பெண்ணாக கவனம் ஈர்க்கிறார்.

சனந்த், கபில வேணு, ரோஹித் கோகடே, விது, சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, காயல் வின்சென்ட் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறைவில்லை. செல்வரத்தினம் பிரதீபனின் ஒளிப்பதிவில் காட்சிகள் உணர்வுப்பூர்வமாகவும், கே-வின் இசை உணர்ச்சி பூர்வமாகவும் நகருகிறது.

பேசியே காட்சிகளை நீட்டிக்கொண்டு இருக்காமல், சொல்ல வந்த கருத்தை சுருங்க சொன்ன விதம் (படத்தின் நீளம் குறைவு) பாராட்டுக்குரியது. சில இடங்களில் நாடகப்போக்கை தவிர்த்திருக்கலாம். யுத்தம், ரத்தம் என்று வழக்கமான போர் கதை என்று இல்லாமல், போருக்கு நடுவில் மக்கள் அனுபவித்த வலியை அழுத்தமாக பதிவு செய்துள்ள இயக்குனர் சோமிதரனை பாராட்டலாம்.

நீளிரா - தவிப்பு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com